நாடு முழுவதும் அதிகம் உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒன்றாக ஒமிக்ரான் இருக்கிறது. அந்த வைரஸின் பரவும் வேகம் பன்மடங்கு அதிகம், தீவிரத் தன்மையும் அதிகம் என்று பல தகவல்கள் கூறப்படும் நிலையில், ஒமிக்ரான் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’ஒமிக்ரான் எப்படி உருவானது? முதலில் இதை எவ்வாறு உச்சரிப்பது? ஒமிக்ரான், ஓமிக்ரான் ஒமைக்ரான், ஓமைக்ரான் எனப் பல்வேறு விதமாகக் காணமுடிகிறதே?
மக்கள் கொரோனா வைரஸில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இதனால் தன்னுடைய இருப்பை நிலைநாட்ட, வைரஸ் தன்னை உருமாற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தன்னுடைய கூர்ப்புரதத்தில், 32 வகையான மாற்றங்களுடன் ஒமிக்ரானாக உருமாறியுள்ளது. ஒமிக்ரான் என்பதே சரியாக உச்சரிப்பாக இருக்கும்.
ஒமிக்ரானின் அறிகுறிகள் என்ன? தீவிரத்தன்மை எப்படி இருக்கும்?
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோருக்கு தொண்டை கரகரப்பு, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்க வாய்ப்புள்ளது. முதல் 3 நாட்களில் சாதாரண காய்ச்சல்தான் என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. அறிகுறி உள்ளவர்கள் ஒத்திப்போடாமல், உடனடியாக அருகில் உள்ள ஆய்வகங்களுக்குச் சென்று மாதிரியைக் கொடுக்க வேண்டும். முடிவில் நெகட்டிவ் வந்துவிட்டால் பிரச்சினையில்லை. பாசிட்டிவ் வந்துவிட்டாலும் பதற்றம்கொள்ள வேண்டாம்.
மருத்துவமனையில், முறையாகத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். பொது இடங்களில் 35 சதவீத மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். அவர்களில் முறையாக அணிவோர் அதிலும் குறைவு. மூடப்பட்ட அறைகளில் 20-க்கும் மேற்பட்டோர் இருக்கும் சூழலில், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதையும் பலர் கடைப்பிடிப்பதில்லை. 14 முதல் 20 சதவீதத்தினர் மட்டுமே இதைக் கடைப்பிடிக்கின்றனர்.
கொரோனா பாதிப்பு உடைய இரண்டு பேருக்கு நடுவில், ஒருவர் முறையாக முகக்கவசம் அணிந்திருந்தால், அவருக்கு 99% தொற்றுப் பரவ வாய்ப்பில்லை என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. ஒமிக்ரானைக் கடந்து வருவது பொதுமக்களின் கையில்தான் உள்ளது.
ஒமிக்ரானுக்கென பிரத்யேக, சிறப்புப் பரிசோதனைகள் தேவையா? பரிசோதனை முடிவுகள் வெளியாக எத்தனை நாளாகும்?
ஒமிக்ரான் குறித்து பொது சுகாதார வல்லுநர்களும் உலக சுகாதார நிறுவனமும் கூறியிருப்பது இதுதான். குறிப்பிட்ட ஆர்டிபிசிஆர் சோதனைகளில் 3 மரபணுக்கள் தெரிய வேண்டும். கூர்ப் புரதத்தில் ஏற்படும் மாற்றத்தால் ’எஸ் மரபணு’ (S gene) வரைபடம் காண்பிக்கப்படாது. டெக்பாத் என்ற சோதனை உபகரணம் மூலம் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 13 அரசு ஆய்வகங்களில் இந்த டெக்பாத் உபகரணங்கள் உள்ளன. தனியாரிலும் இந்த வசதி தற்போது உள்ளது.
5 முதல் 6 நாட்களில் மரபணு பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முடிவுகளை அறியத் தமிழகத்தில் தேனாம்பேட்டையிலும் பெங்களூருவிலும் சிறப்பு மையங்கள் உள்ளன.
பொதுவாக எந்த ஒரு நோய் என்றாலும் வயதானவர்களும் இணை நோய் கொண்டவர்களும் அதிகம் பாதிக்கப்படுவர். ஒமிக்ரானால் கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானோர், பாலூட்டும் தாய்மார்கள், இணை நோய் கொண்டோர் என யாருக்கு அதிக பாதிப்பு?
இதுவரை கிடைத்துள்ள தரவுகள் குறைவாகவே உள்ளன. குழந்தைகளுக்கு சற்றே அதிக பாதிப்பு ஏற்படுவதாக தென்னாப்பிரிக்காவில் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை வைத்து எந்த முடிவும் எடுக்கவேண்டாம்.
அதே நேரத்தில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களே அதிகம் பாதிப்பைச் சந்தித்தனர். அவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினை, கேன்சர் உள்ளிட்ட இணை நோய்களும் இருந்தன. இத்தகையோர் தற்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து பயணித்தோர் மூலமாகவே ஒமிக்ரான் தொற்று இங்கே நுழைய வாய்ப்புள்ளது என்ற சூழலில், விமான நிலையங்களில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் ஆர்டிபிசிஆர் மற்றும் துரித ஆர்டிபிசிஆர் என இரண்டு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அபாயம் என்ற பட்டியலில் உள்ள 32 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் இந்த சோதனை செய்யப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில், தோராயமாக 2% பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. இதற்காக விமான நிலையத்திலேயே பிரத்யேகக் காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நெகட்டிவ் வந்தால், 7 நாட்கள் கட்டாய வீட்டுத் தனிமைக்கு அனுப்பப்படுவர். அவர்களை உள்ளாட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பர். 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை மேற்கொண்டு, அப்போது நெகட்டிவ் வந்தால், சம்பந்தப்பட்டோர் சுய கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இதில் யாருக்கேனும் பாசிட்டிவ் வந்தால், உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். இவர்களை வழக்கமான கொரோனா நோயாளிகளுடன் சேர்த்து அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க, விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிக்குத் தமிழக அரசே இலவசமாகப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து வரும் தச்சர், கட்டிடத் தொழிலாளிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரசே இலவசமாகச் சோதிக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட 100 பேரும் இரு தவணை ஊசி செலுத்திக் கொண்டவர்கள். அவர்களுக்கு எப்படித் தொற்று? இதை எப்படிப் புரிந்துகொள்வது?
தடுப்பூசி அதிகம் செலுத்திக்கொண்ட நாடுகளில் உள்ள மக்களின் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒமிக்ரான் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள 2 தவணை தடுப்பூசிகளுடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தகவல் உலவுகிறதே?
தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு, ஐசிஎம்ஆர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து இதை முடிவு செய்யும். முதலில் தொழில்நுட்பக் குழு இதைப் பரிந்துரைக்கும். முதியோர்கள், 2 தவணை செலுத்திகொண்ட சிலர் எனப் பல தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஓராண்டாக உள்ளது. இந்த சூழலில், பூஸ்டர் செலுத்தப்பட வேண்டுமா என்று ஆலோசிக்கப்படும்.
அதே நேரத்தில் நாட்டின் பல மாநிலங்களில் முதல் தவணை செலுத்தப்படாமலேயே நிறையப் பேர் உள்ளனர். இங்கு ஒரு கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட 2 கோடி பேருக்கு 2-வது தவணை செலுத்தப்படவில்லை. 18 வயதுக்கு உட்பட்டோரும் காத்திருக்கிறார்கள். இவற்றையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஒமிக்ரான் தொற்று பன்மடங்கு வேகத்தில் பரவும் என்று தகவல்கள் வெளியாகின்றன. மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், பள்ளிகள் தொடர்ந்து இயங்குமா?
இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனித்துத்தான் முடிவுகளை எடுக்க முடியும். எல்லாவற்றையும் மூடுங்கள் என்று தடாலடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.
பள்ளி செல்லாத நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனமே தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் படிக்க வாய்ப்பு கொடுங்கள் என்றும் தெரிவித்திருந்தது. அதைத்தான் பின்பற்றி வருகிறோம். ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதாரமுள்ள கூடுதல் தகவல்கள் கிடைக்கக் கிடைக்க, மாற்றங்கள் வரலாம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வங்கி வாசலில் காத்திருந்ததைப்போல, இரண்டாவது அலையின்போது மருத்துவமனை வாசல்களில் ரெம்டெசிவிர் மருந்துகளுக்காகக் கால்கடுக்கக் காத்திருந்தனர். ஒமிக்ரான் வேகமெடுக்கும் இந்த சூழலில் எவ்வளவு ஆக்சிஜன் படுக்கைகள், மருந்துகள் கைவசம் உள்ளன? தமிழகத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
இதற்கென 1,12,000 வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் 35,000 வார்டுகளையும், 10,000 ஐசியூக்களையும் தயாராக வைத்திருக்கிறோம். 8 ஆயிரம் வென்டிலேட்டர்களும் தயாராக உள்ளன. கருப்புப் பூஞ்சைக்கான விலை உயர்ந்த மருந்துகளும் கைவசம் உள்ளன. ஒமிக்ரானைக் கண்டறியும் பரிசோதனைக்காக 3.25 லட்சம் டெக்பாத் உபகரணங்கள் கையில் உள்ளன. 85 ஆயிரம் உபகரணங்களுக்கு முன்பதிவு செய்துள்ளோம்.
ஆனால் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், அலட்சியமாக இருந்துவிட முடியாது. மத்திய மருத்துவ சேவைக் கழகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். எனினும் நோய் வராமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனம், கெட்டிக்காரத்தனம்.
மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? புதிய கட்டுப்பாடுகள் வருமா?
அந்த சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் போர்க்கால அடிப்படையில் தொடர் முயற்சிகளை எடுத்துவருகிறோம். எங்களுக்குப் பின்னால் ஏராளமான ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
முதல், இரண்டால் அலையின்போது தொற்று எப்படிக் குறைந்தது? மக்கள் மரண பயத்துடன் முகக்கவசம் அணிந்தனர், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தனர். தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதனால்தான் குறைந்தது. மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஊரடங்கைத் தவிர்க்கலாம்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து, சுனாமியின்போது உங்களின் தடுப்பு நடவடிக்கைகள் அதிகம் கவனம் ஈர்த்தன. கரோனா, டெல்டா வைரஸ் வரை அப்படித்தான். இப்போது ஒமிக்ரான்.. இவற்றைக் கையாள்வதில் மன அழுத்தமாக உணர்கிறீர்களா?
கண்டிப்பாக. இத்தகைய சம்பவங்களின்போது தனிப்பட்ட வகையில் கண் கலங்கியதுண்டு. சுனாமியின்போதும் அப்படித்தான். அப்போது ஒரு நபர் , தன் குடும்பத்தில் 13 பேரை ஒரே நாளில் பறிகொடுத்தார். மீனா, செளம்யா என்ற குழந்தைகளை ஒரு பாலத்தின் அடியில் கண்டெடுத்தோம். தற்போது அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது நிச்சயம் மன அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறமுடியாது. ஒருவரின் உயிர் போகும்போது அதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியாது. தினந்தோறும் 18- 20 மணி நேரப் பணி. இரவில் ஆக்சிஜன் டேங்க் உரிய நேரத்தில் வராதபோது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிர்கள் தத்தளித்த சூழலில், மன அழுத்தத்தில்தான் இருந்தேன். ஆனாலும் அதிகாரிகள் குழுவாக இணைந்து ஆதரவு அளித்தனர். முருகானந்தம் ஐஏஎஸ், பங்கஜ் பன்சல், செந்தில் ஐஏஎஸ், பிரபுசங்கர் ஐஏஎஸ் மற்றும் ஏராளமான இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலையைப் பகிர்ந்து கொண்டனர். ஊர் கூடித்தான் தேர் இழுத்தோம்.
பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தனர். குடிசைப் பகுதியில் 100 சதவீதம் ஒத்துழைப்பு கிடைத்தது. மக்களின் ஒத்துழைப்பு எப்போதும் தொடர வேண்டும்’’.
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பேட்டியை வீடியோ வடிவில் காண