மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வேலூர் தொகுதியில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.


மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு:


இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், காலை முதலே மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில், குடியாத்தம் அருகே பிரச்சாரத்தின்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


இதையடுத்து, அவர் அங்கே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், மன்சூர் அலிகானிடம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, சென்னை வந்த மன்சூர் அலிகான் கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ரசிகர்கள் வேதனை:


பிரச்சாரத்தின்போது மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான், பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகாரம் அளிக்காத காரணத்தால், அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.


ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பலாப்பழ சின்னமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: "தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்" தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்!


மேலும் படிக்க: Pak Social Media Ban: பாகிஸ்தானில் X-க்கு தடை! எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்