தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தலைவர்கள் வேட்பாளர்கள் என அனைவரும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஷ்வத்தாமனை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவண்ணாமலை காமராஜர் சிலையிலிருந்து திருமஞ்சன கோபுர தெரு, திருவூடல் தெரு, தேரடி வீதி, காந்தி சிலை சந்திப்பு வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ROADSHOW-வில் ஈடுபட்டு பாஜக வேட்பாளருக்கு தாமரைச் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். அப்போது வழிநெடுக்கிலும் சாலையின் இரு புறங்களிலும் பாஜக கொடி மற்றும் தோழமை கட்சியினரின் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தது. சாலையின் இரு புறங்களிலும் பெண்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் திரண்டு நின்று ராஜ்நாத் சிங்குக்கு ரோஜாப்பூ மலர்களை தூவி வரவேற்றனர்.
மேலும், அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் வரும்போது செங்கோல் வழங்கப்பட்டது. வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் ”மீண்டும் மோடி வேண்டும் மோடி” என கோஷங்களை எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து காந்தி சிலை முன்பாக ROAD SHOW நிறைவடைந்தது.
பாஜக வேட்பாளர் அஷ்வத்தாமன் பேசுகையில்
”தாமரை சின்னத்தில் எனக்கு வாக்கு அளித்து என்னை வெற்றிபெற வைத்தபிறகு திருவண்ணாமலையில் ஏர்போர்ட் அமைத்து தரப்படும், திருவண்ணாமலை ஸ்மார்ட் சிட்டி அமைத்து தரப்படும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரயில் பாதை அமைத்து தரப்படும். கிரிவலப்பாதை மேன்படுத்தப்படும், நரேந்திர மோடியின் நல்லாட்சியில் வழங்கப்படும் திட்டங்கள் கொண்டுவந்து நிறைவேற்றுவேன். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன்” என்றார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே உலகத்திலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. குறிப்பாக தமிழ் மிகச்சிறந்த மொழி. எதிர்பாராத விதமாக என்னால் தமிழில் பேச முடியவில்லை. நான் உங்கள் முன்பு இந்தியில் உரையாற்றுகிறேன். நான் பேசுவதை ரவி உங்களுக்கு தமிழில் மொழி பெயர்த்து வழங்குவார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்த பிறகு உங்களுடைய உற்சாகத்தை பார்க்கும்போது பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி வடக்கிலும், தெற்கிலும் பிரித்து ஆட்சியை நடத்த நினைக்கிறார்கள். பாஜக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து திசைகளில் உள்ள அனைவரும் கலாச்சாரம் மற்றும் அரசியலில் பாரம்பரியத்தோடு ஒன்றாக இணைந்து வாழ வேண்டும். அயோத்தியில் ராமர் பிறந்திருக்கலாம். ஆனால் தெற்கு திசையில் ஈஸ்வரனை வணங்கி இருக்கிறார். பாஜக தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எடுத்து செல்கிறது.
மோடி பாரதப் பிரதமராக ஆன பிறகு உலக நாடுகள் அனைத்தும் மோடி பேசுவதை உன்னிப்பாக கவனிக்கின்றன
பாஜகவின் நோக்கம் அரசியலில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, இந்திய தேசத்தை கட்டமைப்பதே, சகோதர சகோதரிகளே காங்கிரசுக்கும் திமுகவிற்கும் குடும்ப ஆட்சி தான் முக்கியம். குடும்ப ஆட்சி தான் முதலில் கவனிப்பார்கள். பாஜகவிற்கு அப்படியல்ல, பாரத இந்தியா தான் முக்கியம், பாரதப் பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. காரணம் பாரத நாடு 2014-ல் உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. தற்போது ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்தார். நான் சொல்கிறேன் 2027-ல் இந்திய பொருளாதாரம் உலகத்தில் பாரத நாடு மூன்றாவது இடத்திற்கு வரும் என உறுதிப்பட தெரிவித்தார். உலகத் தலைவர்கள் பேசுவது இந்தியாவை இனி யாராலும் நெருங்க முடியாது முன்னேற்றப் பாதைக்கு செல்லக்கூடிய நாடாக மாறியுள்ளதாக அனைவராலும் பேசப்படுகிறது. உலகத்தில் அதிவிரைவாக பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடு நம்முடைய பாரத நாடு. ஒரு காலகட்டத்தில் பாரத நாட்டில் உள்ள தலைவர்கள் பேசினால் யாரும் கூர்ந்து கவனித்தது கிடையாது. ஆனால் மோடி பாரதப் பிரதமராக ஆன பிறகு உலக நாடுகள் அனைத்தும் மோடி பேசுவதை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
உலகம் முழுவதும் 3வது முறையாக பாரத பிரதமராக மோடி மீண்டும் வருவார்
மோடியின் நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்திருகிறது. 2047 உலகத்திற்கே தலைசிறந்த வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கும். திமுகவும், காங்கிரசும் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார்களா என்பதை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களாகிய நீங்கள் தான் ஆமாவா இல்லையா என்பதை சொல்ல வேண்டும். நான் கேட்கிறேன் திமுக தனது குடும்பம் அரசியலை விட்டுவிடுமா என்பதை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் ஆம் இல்லை என்று கூற வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு இருந்த பிறகும் தமிழகத்தில் ஊழல் குறைந்துள்ளதா நான் உங்களிடம் கேட்கிறேன் காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் நம்முடைய தேசம் பாதுகாப்பாக இருந்ததா, நான் உங்களிடம் கேட்கிறேன் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி தொடர்ந்து இருக்குமா உங்களுடைய பதில் இல்லை என்பதையே நான் ஏற்றுக்கொள்கிறேன். பாரத நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி அவர்களே மீண்டும் வருவார் என்று பேசுகின்றனர்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே சீரான சிவில் கோர்ட் கொண்டு வரப்படும்
பாஜக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை போல், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினோம். மேலும் பால ராமரை அதில் பிரதி செய்துள்ளோம். ராமர் கோவில் கட்டி ராமரை பிரதிஷ்டை செய்த பிறகு பாரத நாட்டில் ராமராஜ்யம் தான் அமைக்கப் போகிறோம். 370 சட்டத்தை ஒழிப்போம் என்று பாஜக சபதம் செய்தது. சொன்னதை போல் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றி உள்ளோம். இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ள மகிழ்ச்சியே காஷ்மீருக்கும் கிடைத்திருக்கிறது. அதேபோல் சிஏஏ சட்டத்தை நிறைவுற்றுவோம் என்று கூறினோம். அதனை நிறைவேற்றியுள்ளோம். இந்த சட்டத்தின் மூலம் பாரத பிரஜை என்ற உரிமை கிடைக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நான் வாக்குறுதி அளிக்கிறேன். ஒரே சீரான சிவில் கோர்ட் கொண்டுவரப்படும். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அஷ்வத்தாமன் சிறந்த மனிதர், ஒழுக்கமானவர், நல்ல மனிதர், அவர்கள் குடும்பத்தையே எனக்கு தெரியும். அஷ்வத்தாமன் குடும்பமும் நானும் ஒரே குடும்பம் தான். திருவண்ணாமலை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் நன்றி சொல்வதற்கு திருவண்ணாமலைக்கு திரும்பி வருவேன்” என கூறிவிட்டு விடை பெற்றார்.