ABP நாடு செய்தி எதிரொலி காரணமாக , ஏழ்மையால் உயர்கல்வி பயிலமுடியாமல் தவித்துவந்த 19 வயது ராஜேஸ்வரிக்கு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'மாற்றம் அறக்கட்டளை' என்ற தனியார் தொண்டு நிறுவனம் ராஜேஸ்வரியின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது . 





ABP நாடு செய்தி குழுமம் தனது இணையத்தளத்தில் "வறுமையில் சிக்கித்தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி" என்ற தலைப்பில் மாணவி  ராஜேஸ்வரி குறித்த செய்தியை இன்று காலை வெளியிட்டு இருந்தது , இந்த செய்தியைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தது  .

 





 

இந்த செய்தியைப் படித்த , 'மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுஜித்குமார் , ABP நாடு செய்தி குழுமத்தைத் தொடர்புகொண்டு , அதன் மூலமாக ராஜேஸ்வரியிடம் தொலைபேசியில் உரையாடி , மாணவி ராஜேஸ்வரியின் மேற்படிப்புக்குத் தேவையான அணைத்து உதவியையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர் .

 



இது தொடர்பாக மாற்றம் அறக்கட்டளையின் , சுஜித்குமார் நம்மிடம் பேசியபோது " மாற்றம் அறக்கட்டளை" தகவல் தொழில்நுட்பம் , சிவில் சர்வீஸ் , மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களில் முழுநேர  பணிபுரியும் , வல்லுநர்களை , உறுப்பினர்களாகக் கொண்டு லாப நோக்கில்லாமல், ஆதரவற்ற மாணவர்களுக்கு , கல்வி வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக  செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம் . சொல்ல வேண்டுமானால் , நானே ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் , மனித வள (Ruman Resource) துறையில் , முழு நேர வேலை செய்து வருகிறேன் . 

 



 

தேவைப்படுவோருக்கு உதவி செய்வதற்கு , வேலை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிப்பதற்கே , என்னைப் போன்றே முழு நேர பணியில் இருந்துகொண்டே, கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் படைத்த துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்டு இந்த அமைப்பை உருவாக்கி உள்ளேன் என்று தெரிவித்த சுஜித் , மேலும் அவரது மாற்றம் அறக்கட்டளையைப் பற்றிக் கூறும்போது, “கடந்த 2013 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை , இதுவரையிலும் 1300-க்கும் மேற்பட்ட , அநாதை குழந்தைகள் , வறுமையின் விளிம்பில் வாடும் மாணவர்கள் , ஏழை குழந்தைகள் உள்ளிட்டோருக்குக்  கல்வியுடன் சேர்த்து திறன் மேம்பாடு (Skill  development ) பயிற்சிகளையும் கொடுத்து , அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி  கொடுத்துள்ளோம் .



 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் மட்டுமே  ஒரு நாட்டின் வறுமையை முற்றிலும் போக்க முடியும் என்பதை  மாற்றம் அறக்கட்டளை உறுதியாக நம்புவதால், கல்வி கனியை எட்டமுடியாத ஏழ்மையான மற்றும் ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் கண்டு பிடித்து அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பளிப்பதோடு , அவர்களது திறன் மேம்பாட்டிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம் .

 

வேலூரைச் சார்ந்த ராஜேஸ்வரியை இன்று தொடர்பு கொண்டு பேசினோம் , ராஜேஸ்வரிக்கு சென்னை அல்லது , கோய்ம்பத்தூரில் அவர் விரும்பும் கல்லூரியில் , அவர் விரும்பும் பாடப்பிரிவினில்  படிப்பதற்கு , அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளோம். அவர் வெளியூர் சென்று படிப்பதற்கு தனது பெற்றோர் மற்றும் ஓவிய ஆசிரியருடன் ஆலோசனை செய்ய வேண்டியிருப்பதால் , அவர்களிடம்  கல்லூரி மற்றும் பாடப்பிரிவு உள்ளிட்டவற்றைக் கலந்து ஆலோசனை செய்துவிட்டு , மீண்டும்  தொடர்பு கொள்வதாகத் தெரிவித்துள்ளார்” என்று கூறினார் .  

 



 


மேலும் ராஜேஸ்வரியை அடையாளம் கண்டுபிடிக்க உதவிய ABP நாடு செய்தி குழுமத்திற்கு தங்களது , மாற்றம் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார் .

 

யார் இந்த 'கலை இளமணி'- ராஜேஸ்வரி முழு விபரம் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்க : வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!