தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறை சார்பில் மாவட்டங்களில் உள்ள கலைஞர்களிடையே , திறமையுள்ள கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் , மாவட்ட கலை மன்றங்கள் தொடங்கப்பட்டு , கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் , திறன் படைத்த ஐந்து கலைஞர்களுக்கு அவர்களது வயதிற்கு ஏற்றவாறு , கலை இளமணி (18 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுப் பிரிவினருக்கு) , கலைவளர்மணி

  (19 முதல் 35 வயதுள்ள பிரிவினருக்கு ) , கலை சுடர்மணி (36 முதல் 50 வயதுள்ள பிரிவினருக்கு ) ,கலை நன்மணி (51 முதல் 60 வயதுள்ள பிரிவினருக்கு ) , மற்றும் கலை முதுமணி (61  வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது பிரிவினருக்கு )  உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் விருது வழங்கி , கலை ஆர்வம் உள்ளவர்களைக் கௌரவித்து வருகின்றனர் .





அதன் படி , வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி கங்கையம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ,  ராஜேஸ்வரி என்ற 19 வயதுடைய மாணவி, தனது பள்ளிப்பருவ காலத்திலிருந்தே  , செஞ்சிலுவை  சங்கம் , அரசு அருங்கட்சியகம் , போக்குவரத்துத்துறை , வனத்துறை உள்ளிட்ட துறைகள்  மூலம் நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் பங்குபெற்று , 25 கும் மேற்பட்ட மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் , முதல் பரிசை வென்றுள்ளார் , ராஜேஸ்வரி .




 


கடந்த 10 வருடத்திற்கும் மேலாகக் கலையுலகில் பல சாதனை படித்துவரும் ராஜேஸ்வரிக்கு , தனது 17வது வயதில் , 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான  கலை இளமணி விருதை தமிழ் நாடு அரசின் கலைபண்பாட்டு துறையால் வழங்கப்பட்டது , தொடர்ந்து கலைத்துறையில் பல சாதனை படைத்தது வரும்  ராஜேஸ்வரிக்கு , தற்பொழுது அவரது கல்லூரி மேற்படிப்பிற்குக் கட்டணம் செலுத்தக் கூட வசதியில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது .


இதுகுறித்து ராஜேஸ்வரியின் ஓவிய ஆசிரியர் செல்வ கணேஷை தொடர்புகொண்டு பேசியபோது , "ராஜேஸ்வரி சத்துவாச்சாரி அரசுப் பள்ளியில்  5 ஆம் வகுப்பு  படிக்கும்போது , அவரது பள்ளியில் பகுதிநேர ஓவியாசிரியாராக பணியாற்றினேன் , அப்பொழுது ராஜேஸ்வரிக்கு , ஓவியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு  இருப்பதை உணர்ந்துகொண்டு , அவருக்குத் தொடர்ந்து ஓவியப்பயிற்சி அளித்து , மாவட்டம் முழுவதும் நடக்கும் ஓவியப் போட்டிகளில் பங்குபெறச் செய்தேன் .




ஓவியத்தின்மீது இருந்த ஆர்வ மிகுதியால் அவரும் பல பரிசுகளை , வென்று இளம் கலைமணி விருதுவரை பெற்றுள்ளார் . இன்றுவரையும் கலைத்துறையில்  பல சாதனைகளைப் படைத்து வருகிறார்  அவர் எனது  மாணவி என்று கூறிக்கொள்வதில்  பெருமை படுகிறேன் . எனினும் தற்பொழுது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக , ராஜேஸ்வரி , முழுநேர கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் , வீட்டிலிருந்தே தொலைதூர கல்வி வாயிலாக , தமிழ் இலக்கியம் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்குத் தமிழக அரசு சார்பில் உரிய உதவி செய்திடவேண்டும் ,"என்று கூறினார் ஓவிய ஆசிரியர் செல்வ கணேஷ் .


ABP நாடு செய்தி குழுமம் ராஜேஸ்வரியைத் தொடர்புகொண்ட பொது "சிறுவயதிலிருந்தே பல ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று இருந்தாலும் , நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது , குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு துறை மூலம் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் நான் குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்காக வரைந்த ஓவியம் , 2018  ஆம் ஆண்டு , மகாத்மா காந்தி 150வது ஆண்டு கொண்டாட்டத்தில்  , எனது தோழியுடன் சேர்ந்து , மகாத்மா காந்தியின்  150 வெவேறு வடிவில் வரைந்த ஓவியம் மற்றும் சமீபத்தில் ,




ஜெல் பேனா கொண்டு 1,00,000 புள்ளிகளால் இசைப்பாடகி பாரத ரத்னா விருதுபெற்ற M Sசுப்புலட்சுமியின் உருவத்தை வரைந்த ஓவியம் என்னை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டியது . என்று கூறிய ராஜேஸ்வரி , தனது சோகமான குடும்ப  பின்னணியையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் . 
 
"மதுரை தான் எங்களது சொந்த ஊர் ,பிழைப்பு தேடி நாங்கள் வேலூருக்கு வந்து 14  வருடங்கள் ஆகின்றது   , அப்பா , சேகர் (46)  கே வீ குப்பம் அருகே உள்ள  டாஸ்மாக் கடை எதிரே தள்ளு வண்டியில், சால்னா கடை வைத்து நடத்திவருகிறார் ,  அம்மா ராணி (37) வீட்டில் தான் இருக்கிறார்   , எனக்குக் கமல் ராஜ் என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி இருக்கிறார் , காலையிலிருந்து மாலைவரை , கால் கடுக்க , தள்ளுவண்டியில்  நின்று   அப்பா சம்பாதித்துவரும் 200 , 300 ரூபாயில் தான் குடும்பம் ஓடுகிறது . 




தினமும்  10 மணி நேரத்திற்கு மேல் அப்பா நின்றுகொண்டே வியாபாரம் செய்வதால் , அவரது இரண்டு கால் தொடைகளிலும் நரம்பு சுற்றிக்கொண்டு  தற்பொழுது அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அப்பா சரிவர வேளைக்கு செல்லமுடிவதில்லை . இதனால் தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முதலாம் ஆண்டிற்குமேல் தொடரமுடியாமல் தொலைதூர கல்வி படிப்பிற்கு  விண்ணப்பித்துள்ளேன்   , எனவே எங்கள் குடும்ப ஏழுமையைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார் .


தொடர்ந்து கலை உலகில் பல சாதனை படைத்தது வேலூர் மாவட்டத்திற்கு பல பெருமை சேர்த்துவரும் ராஜேஸ்வரியின் கோரிக்கையை தமிழ் நாடு அரசு  நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .