திருவண்ணாமலை மாவட்டம் மாதலம்பாடி கிராமத்தில் உள்ள ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பாலிசி செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் மங்கலம் காவல்நிலைய துணை ஆய்வாளர் நசுருதீன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரைஸ் மில்லில் ரேஷன் அரிசியை பாலிசி போட்டு மாவாக அரைத்தும் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரைஸ்மில்லில் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதில் இரண்டு லோடு வேன்களில் இருந்த ரேஷன் அரிசி மற்றும் ரைஸ்மில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் என சுமார் 15 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


 




இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வரப்பட்டு மாதலம்பாடி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் என்ற ரைஸ்மில்லில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை பாலிஷ் செய்தும், அதனை மாவாக அரைத்தும் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்தது தெரிய வந்தது. இந்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரைஸ்மில் மேலாளர் சங்கர் வயது (45) மற்றும் அதே கிராமத்தில் வசிக்கும் பரசுராமன் வயது (35), அழகு பாண்டி வயது (23) ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து டன் கணக்கில் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 7 டன் ரேஷன் அரிசி மட்டுமே பறிமுதல் செய்துள்ளோம் அந்த அரிசி மூட்டைகளை சிவில் சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்கள் தொடர்பு உள்ளார்களா இவர்கள் எவ்வளவு நாட்களாக ரேஷன் அரிசி கடத்தி வந்துள்ளார்கள் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்கின்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




 


இந்த நடவடிக்கையில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்ததாக சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காவல்துறையினரால் கூறப்படுகிறது. ஆனால் சிவில் சப்ளை குடோனில் ஏழு டன் அரிசி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதில் மீதம் உள்ள அரிசி எங்கே போனது என்று கேள்விக்குறியாக உள்ளது. உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இப்படி அலட்சியமாக இருந்தால் ரேஷன் அரிசி கடத்தலை எப்படி தடுக்க முடியும் அத்துடன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் காணாமல் போன 8 டன் ரேஷன் அரிசி குறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில், தனியார் ரைஸ்மில்லில் அரைக்கப்பட்ட ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளதாகவும், கடத்தல் ரேஷன் அரிசியை அரைத்த பிறகு நாங்கள் அதனை பறிமுதல் செய்யமுடியாது அதனால் அங்கேயே விட்டு வந்ததாக கூறப்படுகிறது.