வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை தற்போது தீய வழியில் பயன்படுத்தும் நோக்கமும் அதிகரித்து வரும் சூழலில், ஏஐ டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
ரஷ்மிகாவின் போலி வீடியோ:
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த வீடியோ உண்மையானதை போன்றே இருந்தது.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்தனர். மேலும் இது போன்று நடைபெறமால் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதேபோல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட டீப் பேக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், சில நடிகைகளை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படங்கள் வெளியானது.
முன்னதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "ஆன்லைன் தளங்களில் தவறான தகவல்கள் பரவினால் அதைத் தடுப்பது அவர்களின் கடமை. இதுபோல பரவும் போலி வீடியோ குறித்த தகவல் கிடைத்தால் உரிய ஆய்வு செய்யப்பட்டு அடுத்த 36 மணிநேரத்தில் அதை அகற்ற வேண்டும். டிஜிட்டல் ஸ்பேஸில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் உருவாக்குவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டது.
பிரதமரின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ:
இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு விழாவில் பெண்களோடு சேர்ந்து கர்பா நடனம் ஆடுவது போன்ற ஏஐ டீப் ஃபேக் வீடியோ வைரலானது. இதுகுறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, " நான் கர்பா நடனம் ஆடுவது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நான் பார்த்தேன்.
இதுபோன்ற போலி வீடியோக்கள் பரவுவது மிகவும் கவலை அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
மேலும் படிக்க: MP Chhattisgarh Election LIVE: நிறைவடைந்தது வாக்குப்பதிவு; 5 மணி நிலவரம்.. சத்தீஷ்கரில் 67.34% - மத்திய பிரதேசத்தில் 71.11%
மேலும் படிக்க: Uttarkhand Tunnel Collapse: 120 மணி நேரம்! சுரங்கப் பாதையில் சிக்கி தவிக்கும் 40 தொழிலாளர்கள்...திக் திக் நிமிடங்கள்!