MP Chhattisgarh Election LIVE: நிறைவடைந்தது வாக்குப்பதிவு; 5 மணி நிலவரம்.. சத்தீஷ்கரில் 67.34% - மத்திய பிரதேசத்தில் 71.11%

இன்று சத்தீஸ்கரின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நடத்தப்படுகிறது. சத்தீஸ்கருடன் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.

சுதர்சன் Last Updated: 17 Nov 2023 06:11 PM
MP Chhattisgarh Election LIVE: நிறைவு பெற்றது வாக்குப்பதிவு

மத்தியப் பிரதேசத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 71.11 சதவீத வாக்காளர்கள் சத்தீஸ்கரில் 67.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

MP Chhattisgarh Election LIVE: சத்தீஷ்கரில் 55% - மத்திய பிரதேசத்தில் 65.45% வாக்குப் பதிவு

 


பிற்பகல் 3 மணி நிலவரப்படி சத்தீஷ்கரில் 55% வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 65.45% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


 

MP Chhattisgarh Election LIVE: சத்தீஷ்கரில் 37% - மத்திய பிரதேசத்தில் 45.40% வாக்குப் பதிவு

மதியம் 1 மணி நிலவரப்படி சத்தீஷ்கரில் 37% வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 45.40% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

MP Chhattisgarh Election LIVE: வாக்குச் சாவடி மையத்தில் கல் வீச்சு.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

டிமானி சட்டமன்றத் தொகுதியின் 147-148 வாக்குச் சாவடிகளுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோரேனாவின் மிர்கானில் கல் வீச்சு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

MP Chhattisgarh Election LIVE: 9 மணிக்கு முன்பு வாக்களித்தவர்களுக்கு இலவச உணவு

இந்தூரில் காலை 9 மணிக்கு முன்பு வாக்களித்த மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 





MP Chhattisgarh Election LIVE: தேர்தலில் வாக்களித்த அரசியல் கட்சி தலைவர்கள்

மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் தேர்தலில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல் நாத் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர்.

MP Chhattisgarh Election LIVE: மத்திய பிரதேசம், சத்தீஸ்கரின் வாக்குப்பதிவு நிலவரம்

காலை 9:30 மணி நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் 11.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சத்தீஸ்கரில் 5.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Background

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது. 


காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் தொடங்கியது.


சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவும் மிசோரத்தில் ஒரே கட்டமாகவும் கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று சத்தீஸ்கரின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நடத்தப்படுகிறது. சத்தீஸ்கருடன் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.


சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 18,800 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 70 தொகுதிகளில் மொத்தம் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிந்த்ரனவகர் சட்டமன்றத் தொகுதியின் ஒன்பது வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.


இதற்கிடையில், மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பாலகாட் மாவட்டத்தின் பைஹார், லாஞ்சி மற்றும் பர்ஸ்வாரா சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மாண்ட்லா மற்றும் திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.



சுமார் 42,000 வாக்குச்சாவடிகளில் வெப்காஸ்டிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, 700 மத்தியப் பாதுகாப்பு படைகளும், 2 லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.59 கோடி பேர், வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அதில், 2.87 ஆண்களும் 2.71 பெண்களும் அடங்குவர்.                                                



இச்சூழலில், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தும்படி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, "ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவைக் கொண்டாட மாநிலத்தின் (மத்தியப் பிரதேசம்) ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.


சத்தீஸ்கர் சட்டப்பேரவை இன்று இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது ஜனநாயக மரபுகள் மற்றும் நடைமுறைகளை நிலைநிறுத்த உங்கள் ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாததாகும்" என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.