எவர் சில்வர் பாத்திரங்களின் எழுச்சிக்கு பிறகு மண்பாண்ட சமையல் முறையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்ட நிலையில் மண்பாண்ட சமையம் மீதான மய்யல் தற்போதைய தலைமுறைக்கு அதிகரித்து வருகிறது. தற்போதைய நவீன யுகத்தில் எவர்சில்வர் பாத்திரங்கள், நான்ஸ்டிக் பாத்திரங்கள் போன்றவற்றில் தான் சமையல்கள் நடக்கின்றன. வீட்டிலேயே இந்த நிலைமை என்றால் ஹோட்டல்களில் சொல்லவா வேண்டும்? ஆனால் அந்த நிலையிலும்கூட அனைத்து உணவுகளையுமே மண்பாண்டங்களில் செய்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றனர் திருச்சியில் செல்லம்மாள் மெஸ் உணவகத்தினர்.
செல்லம்மாள் மெஸ்ஸில் சென்று அமர்ந்தால் வாழை இலை விரிக்கப்பட்டு, சிறிய மண் குவளைகளில் பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகள், கீரைகள் என்று கொண்டு வந்து காண்பிக்கின்றனர். அதில் நமக்கு பிடித்தவற்றை சொன்னால் அடுத்த சில நிமிடங்களில் சுடச்சுட நமக்கு வந்துவிடும். குறிப்பாக வாழைப்பூ பொரியல், வல்லாரை, பொன்னாங்கண்ணி ,கீரை கூட்டு போன்றவை கிடைக்கின்றன. குழம்பு வகைகளில் பருப்பு குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, கீரை குழம்பு, மோர் குழம்பு என பல வகைகள் இருக்கின்றன. அத்தனையுமே மண்பானைகளில் சமைத்து மண் குவளைகளில் பரிமாறப்படுகின்றன. இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் அனைத்துமே, சொந்தமாக ஆட்டிய எண்ணெயில் சமைத்து வாழை இலையில் பரிமாறுவதால் எப்பொழுதுமே இங்கு கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஐந்து வகையான கீரைகள், ஏழு வகையான காய்கறி கூட்டு, பொரியல் வகைகள் 8 வகையான குழம்புகள் என அனைத்தும் காலையில் இருந்தே செய்ய தயாராகின்றன. ஆள் உயர அடுப்பில் பெரிய பெரிய மண்பானையில் இந்த உணவுகள் அனைத்தும் சமைக்கப்படுகின்றன. மசாலா அரைப்பதற்கு அம்மிகளையும், உரல்களையும் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். இதைப் பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கடை உரிமையாளரிடம் பேசியபோது, இந்த கடை குறுகிய காலத்தில் நற்பெயர் பெற்று இருக்கின்றது என்றால் அதற்கு தனது மனைவி தான் காரணம் என்று உரிமையாளர் மோகன் தெரிவித்தார்.
மேலும் இருவருக்கும் சமையல் தெரியும் என்கிற காரணத்தினால் அருகில் இருக்கும் மகளிர் விடுதியில் சமைத்து கொடுத்துக் கொண்டிருந்தோம். வீட்டிலும் மண்பானை சமையல் என்பதால் வெளியே கொடுக்கும் உணவுகளையும் அதிலேயே சமைக்க ஆரம்பித்தோம். இதன் காரணமாக பலரும் எங்களை தனியாக உணவகம் தொடங்க சொல்லி கூறினர். அந்த வகையில் தொடங்கப்பட்டதுதான் இந்த மெஸ் என்று தெரிவித்தார். ஆரம்பத்தில் இருந்து ஆரோக்கியமான இயற்கையான உணவை கொடுக்க வேண்டும் என்கின்ற காரணத்தினால், மசாலா, எண்ணெய் என எதிலும் செயற்கையாக இருக்க கூடாது என்று முடிவு செய்தோம். அதனை தொடர்ந்து விறகு அடுப்பு சமையலை செய்தோம். சமையலுக்கு சேர்க்கப்படும் மசாலாகள் அனைத்தையும் இடிக்க, அரைக்க, பொடிக்க என எல்லாவற்றையும் தாங்களே கைப்பட தினமும் அரைப்பதாகவும், சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், பாயாசம், அப்பளம் என எல்லாமே மண் பாத்திரங்களில் சமைக்கிறோம். இதன் காரணமாக உணவின் இயற்கை தன்மை மாறாமல் இருக்கின்றன. இதற்காக தனி ரசிகர்கள் இருப்பதாகவும் மோகன் தெரிவித்தார்.
மேலும் சில சமயங்களில் மண் பாத்திரங்கள் உடைய நேரிடும். அதற்காக தனியாக செலவு ஆனாலும் ஆரோக்கியம் முக்கியம் என்கின்ற காரணத்தினால் தொடர்ந்து மண் பாண்ட சமையல் செய்து வருகின்றோம். வாடிக்கையாளர்களை, வீட்டிற்கு விருந்தாளியாக நினைத்து சுத்தமான உணவை அக்கறையுடன் பரிமாறுவது காரணமாக எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று மோகன் பெருமையாக தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசும்போது, கடை தொடங்கியதில் இருந்தே இங்கு தொடர்ந்து சாப்பிட்டு இருக்கிறேன் என்றும், மண்பானை சாப்பாடு இங்கு ஸ்பெஷல் என்றும் தெரிவித்தார். மேலும் இங்கு ஆரோக்கியமாக இருப்பதன் காரணமாக குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைவருமே இங்கு அடிக்கடி அழைத்து வந்து உணவு உண்போம். அதோடு உணவு பரிமாறும் முறை வித்தியாசமாகவும், மனதிற்கு திருப்பதியாகவும் இருப்பதாக வாடிக்கையாளர் தெரிவித்தார். மற்ற உணவகங்களில் என்னென்ன உணவு இருக்கிறது என்று சொல்லி ஆர்டர் எடுப்பார்கள். ஆனால் இங்கு எல்லாவற்றையும் நம் முன்னாடி கொண்டுவந்து காண்பித்து ஆர்டர் எடுக்கிறார்கள்.
அப்படி காட்டும் போதே நமக்கு மேலும் சாப்பிட தோன்றும். உதாரணமாக மருத்துவ குணம் நிறைந்த கீரை வகைகள் மிகவும் ருசியாக இருக்கும். என்று வாடிக்கையாளர் தெரிவித்தார். அவல் பாயாசம், வாழைப்பூ கோலா உருண்டையை சாப்பிட மட்டுமே இந்த கடைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எனவே வீட்டு சாப்பாடு போன்று சுத்தமான, ஆரோக்கியமான உணவுகள் உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த பயமும் இல்லாமல் தைரியமாக சாப்பிடுவதற்கு திருச்சியில் ஏற்ற இடம் இந்த 'செல்லம்மாள் மெஸ்'.