தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து 


சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து துறையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை சேலம் மாவட்டம் ஓலபுதூர் கிராமத்தைச் சேர்ந்த வரதன் என்பவர் ஒட்டி வந்தார். துறையூர் நகர எல்லை பகுதியான சத்யநாராயண சிட்டி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தது.


அப்போது எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இதில் பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் புளிய மரத்தில் இடிபாடுகளில் சிக்கியதை அடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அவரை காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.




விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 


மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மீதமுள்ள 10 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர் வரதன் என்பவர் சிகிச்சைகாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். 


பேருந்து விபத்து குறித்து பொதுமக்கள் கருத்து.. 


அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இந்த பகுதியில் எப்போதுமே மிக வேகமாக செல்வது வழக்கம். ஆகையால் இந்த பகுதியில் தொடர்ந்து பல விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கும், இருசக்கர வாகனங்களில் வெளியே செல்வதற்கும் அச்சமுடன் உள்ளனர். 


மேலும், இந்த பகுதியில் முழுவதும் மிக குறுகிய சாலைகளாக உள்ளது. அதேசமயம் தரமற்ற சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக இரவு நேரங்களில தெருவிளக்கு வெளிச்சம் இல்லை, இதனால் இரவு நேரங்களில் பல முறை விபத்துகள் நடக்கிறது. 


ஆகையால் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் விபத்துகள் நடைபெறாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.