அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல்துறை வாகனத்தின் பதிவெண் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் 2 வாகன பதிவெண்கள் கண்டுபிடிப்பு.

அஜிக்குமார் வழக்கில் சி.பி.ஐ விசாரணை
 
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார். கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலைய நகை திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்ற போது, கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.ஐ தற்சமயம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் நாளான சி.பி.ஐ விசாரனையின் போது டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரனையை துவங்கினர்.
 
கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன்
 
2-வது நாள் விசாரணையில் மதுரை பகுதிகளில் ஆவணங்களை பெறும் பணியினை மேற்கொண்டதுடன், தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர்களுக்கு விசாரணைக்கான சம்மனை வழங்கினர். இதில் அஜித்குமார் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையர் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் சக ஊழியர்களான பிரவின்குமார், வினோத்குமார், ஆகியோர் மற்றும் அஜித்குமாரின் சகோதரரான நவீன்குமார் ஆகியோர்மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டனர்.
 
சிபிஐ அதிகாரிகள் ஐந்தாவது நாளாக விசாரணை

தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் ஐந்தாவது நாளாக திருப்புவனம் மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன் குமார் உள்ளிட்ட நான்கு பேரை அழைத்து சென்று தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட போலீசார் பயன்படுத்திய டெம்போ வேனை சிபிஐ அதிகாரிகள்  சோதனை செய்து ஓட்டுநர் ராமச்சந்திரனிடம் விசாரணை செய்தனர்.

போலி நம்பர் பிளேட்கள் கண்டுபிடிப்பு

அப்போது அந்த போலீஸ் வாகனம் TN 01G 0491  - TN 63G 0491 சென்னை மற்றும் சிவகங்கை என இரண்டு மாவட்ட பதிவெண்களுடன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டெம்போவின் உள்ளே தடயங்களை சேகரிக்கும் போது மதுபானம், சீட்டு விளையாட்டு கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் போலீஸ் வாகனத்தில் இருந்தது சிபிஐ அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலையை செய்து விட்டு குற்றத்தை மறைக்க அனைத்து சட்டவிரோத செயல்களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளை மட்டுமில்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.