தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மற்றும் நடிகருமான முக முத்து இன்று உடல்நலக்குறைவினால் காலமானார். கருணாநிதியின் மகனான இவருக்கு மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதா பண உதவி கொடுத்தது மற்றும் தனது தந்தைக்கு எதிராகவே பிரச்சாரம் செய்த சுவாரஸ்ய நிகழ்வை குறித்துக்காணலாம்
மு.க முத்து:
முன்னாள் கருணாநிதியின் முதல் மனைவியான பத்மவதிக்கு பிறந்தவர் முக முத்து, தான் பிறந்தவுடன் தாயை இழந்த இவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது இளம் வயதிலேயே அப்பா கருணாநிதியுடன் கட்சி மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சியின் கொள்கை பாடல்களையும் பாடியுள்ளார்.
MGR-ஐ போல் மாற்ற முயற்சி:
அண்ணா மறைவையடுத்து நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று கருணாநிதி முதலமைச்சரானார். மு.க முத்து எம்.ஜி.ஆருக்காகவும் களத்தில் இறங்கி பிரச்சாரமும் செய்தார். தேர்தலில் திமுக பெரும் வெற்றியை பெற்றது, இந்த வெற்றியில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும் போது தான் தனக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், எம்.ஜி.ஆர் எப்போது வேண்டுமானாலும் திமுகவை விட்டு வெளியேறலாம் என்பதை முன்கூட்டியேகணித்த கருணாநிதி, அப்படி நடந்தால் எம்.ஜி.ஆருக்காக திமுகவிற்கு வாக்களித்தவர்களின் ஆதரவை எதிர்காலத்தில் இழக்க வாய்ப்புள்ளது என்பதை கருணாநிதி அறிந்தார். அதன் காரணமாகவே தனது மூத்த மகன் மு.க. முத்துவை, மக்களின் நாயகராக இருந்த எம்.ஜி. ஆருக்கு எதிராக திரைத்துறையில் களமிறக்கினார்.
எம்.ஜி.ஆர் பாணியில் படங்கள்:
பிள்ளையோ பிள்ளை படத்தில் அறிமுகமான மு.க. முத்து, ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆரின் கார்பன் காப்பி போல் உடல்மொழி, சிகை அலங்காரம், முக அலங்காரம், ஆடைகள் என ஒட்டுமொத்தமாக எம்..ஜி. ஆராகவே மாறினார் மு.க முத்து.
ஆரம்பத்தில் ஓரளவிற்கு வெற்றிக் கிடைத்தாலும், காலப்போக்கில் தமிழ் சினிமாவில் ஒரே எம்.ஜி.ஆர். தான் என்பதை உணரும் அளவிற்கு மு.க. முத்து கடும் தோல்விகளை கண்டார். இதனிடையே, 1977ம் ஆண்டு எம்.ஜி. ஆர்., தலைமையிலான அதிமுக ஆட்சிக்கும் வந்துவிட்டது. இதையடுத்து மு.க. முத்துவின் ஒட்டுமொத்த திரைப்பயணமும் முழ்க தொடங்கியது.
தந்தையுடன் மனஸ்தாபம்:
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது கூட தந்தையுடன் கோபித்துக்கொண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லத்திற்கு சென்ற அவரை அப்பாவிடன் நான் பேசுகிறேன் என்று எம்.ஜி.ஆர் சொல்லி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. அரசியல் காரணங்களால் மு.க முத்து தடுமாறிய போது ”பாவம் அவன் இளந்தளிர்” என்று கருணாநிதி சொன்னதாக சொல்லபபடுவதுண்டு. அதன் பிறகு தந்தையுடன் ஏற்ப்பட்ட மனஸ்தாபம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று குடும்ப விழக்களில் கூட கலந்துக்கொள்ளமல் இருந்தார்.
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா:
ஒரு காலக்கட்டத்தில் பயங்கர குடிக்கு அடிமையாக மாறி மு.க. முத்து பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டார். அப்போது தந்தை கருணாநிதியுடனும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தார். அப்போது மு.க முத்துவின் நிலைமையை அறிந்த அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து உதவினார். தனது எதிரி கட்சியின் தலைவர் மகனாக இருந்தாலும் மு.க முத்துவுக்கு ஜெயலலிதா உதவியது அரசியல் வட்டரங்களில் பெரிதும் பேசப்பட்டது.
தந்தைக்கு எதிராக பிரச்சாரம்:
மிகவும் உடல் நலிவடைந்த நிலையில் இருந்த மு.க. முத்து தன்னை, திமுகவின் எதிரிக்கட்சியான அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதன் விளைவாக , தனது தந்தைக்கு எதிராகவே தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டார். கருணாநிதியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகை வீட்டில் வசித்து, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த கருணாநிதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மகனை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், கடந்த 2009ம் ஆண்டு மு.க. முத்துவின் உடல்நிலை மிகவும் மோசமாக, தந்தை கருணாநிதி மீண்டும் ஆதரவுக்கரம் அளித்தார்.