திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நாள் என்று வாரந்தோறும் நடத்தி பொதுமக்களிடையே நேரடியாக புகார் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார். 


மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வழிப்பறி திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


குறிப்பாக மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணமும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.


திருச்சி மாநகர் பகுதியில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வுகளை தொடர்ந்து காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். 




திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது 


இந்நிலையில் கடந்த 09.04.2019-ந்தேதி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக  புகார் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து  புகார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளியான  அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28),  என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 03.06.2019-ந்தேதி மேற்படி குற்றவாளி மணிகண்டன் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.




சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - மகிளா நீதிமன்றம் உத்தரவு


மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தால் மேற்படி குற்றவாளியை மணிகண்டன் என்பவருக்கு ஆயுள்தண்டனை (Imprisonment for Life till remainder of his natural life - அதாவது  எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறை) மற்றும் ரூ.25,000/- அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனை என நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 


மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் இத்தீர்ப்பினை வழங்கினார்கள். அரசு வழக்கறிஞர் ஜாகீர் உசேன் அவர்கள் அரசு தரப்புக்காக ஆஜராகி வாதாடினார்கள்.


இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர் படுத்திய அப்போதைய பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் காவேரி மற்றும் மும்தாஜ் பேகம், மேலும் புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த தற்போதைய அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, பாரட்டினார்கள்.


திருச்சி மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது பெண் மற்றும் பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செயலில் யார் ஈடுபட்டாலும் உடனடியாக சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.