Chennai HC Judge On Caste: ஜாதி, மத அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கமாட்டேன் என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் கண்டனம்:
35 கோடி ரூபாய்க்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, ”நிறுவனத்தை விற்று முதலீட்டாளர்களுக்கு பண்ணத்தை திரும்பத் தருவது தான் தார்மீக பொறுப்பாகும். இதையெல்லாம் மறைத்து மனுக்களை திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் “சில வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை பாதுகாக்க, நீதிமன்றம் வரும்போது சில நீதிபதிகள் அவர்களுக்காக உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள். நீதிபதிகளின் சமூகத்தைச் சாராத வழக்கறிஞர்கள், நீதிபதியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே மூத்த வழக்கறிஞர்களாக அழைக்கின்றனர். பணம், சாதகமான தீர்ப்பு பெறுவதற்காக சில வழக்கறிஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்தார்.
ஜாதி பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன்:
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ஜாதி, மத அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கமாட்டேன். ஜாதி , மதம் நம்பிக்கை அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன். குறுக்கு வழியில் தீர்ப்புகளை பெற முயற்சிக்கும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு எதிராக போரை தொடங்கியுள்ளேன். சில நீதிபதிகள் என்ன மாதிரியான உத்தரவுகளையும் பிறப்பிப்பார்கள். அதன்பின் அத்தகைய நீதிபதிகளுக்கு ஆதரவாக தீர்மானங்களை சில வழக்கறிஞர்கள் நிறைவேற்றுகிறார்கள்” என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கு விவாதத்தின் போது நீதிபதி ஜெயச்சந்திரன் பதிவு செய்த இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.