மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் தனது வாகனம் பறிக்கப்பட்டதாகவும், உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாகவும் பேட்டி அளித்த விவகாரம் நேரில் விசாரணை மேற்கொண்ட தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் டிஎஸ்பி சுந்தரேசனை தற்காலிக பணிநீக்கம் செய்ய திருச்சி மத்திய மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Continues below advertisement

டிஎஸ்பி குற்றச்சாட்டு 

மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் நேற்று காலை தனது அரசு வாகனம் பறிக்கப்பட்டதாகவும், தனக்கு உயர் அதிகாரிகள் அழுத்தம் தருவதாகவும், தன்னை வளைந்து நெளிந்து செல்ல வேண்டும் என உயர் அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் என பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Continues below advertisement

எஸ்.பி.செய்தியாளர் சந்திப்பு 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு பணிக்கு வாகனம் தேவைப்பட்டதால் அவருக்கு மாற்று வாகனம் கொடுத்து அந்த வாகனத்தை பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தினோம். நேற்றைய தினமே அந்த வாகனமும் அவரிடம் வழங்கப்பட்டு விட்டது. உயர் அதிகாரிகள் யாரும் அவருக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை, நேர்மையாக பணியாற்றுபவர்களை காவல்துறையும் அரசும் மரியாதையுடன் நடத்துமே தவிர அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் டிஎஸ்பி சுந்தரேசன் அவர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் என கூறினார்.

டிஐஜி விசாரணை 

அதேநேரம் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனின் செயலுக்கு மறுப்பு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அனைத்து நிலை அதிகாரிகளிடமும் நேரில் விசாரணை மேற்கொண்டார். மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி இடம் விசாரித்த போது டிஎஸ்பியாக சுந்தரேசன் பதவி ஏற்றதிலிருந்து தன்னை மிரட்டி வந்ததாகவும், ஒருமுறை குற்றவாளியை நீதிமன்றத்தில் அஜர்படுத்திய போது நீதிபதி கூறியதன் பேரில் தொலைபேசியில் டிஎஸ்பியை அழைத்தபோது அவர் அதனை ஏற்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் இதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் சக காவலர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் குற்றச்சாட்டு 

இதேபோல் சீர்காழி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயாவிடம் விசாரணை செய்த போது டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்ந்து தான் சொல்வதைதான் செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்து வந்ததாகவும், இல்லை என்றால் தன்னை பற்றி உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளித்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் விசாரணையின் போது டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஏசியும், பிரிண்டர் இரண்டையும் வாங்கி வைக்க சொல்லி சுந்தரேசன் மிரட்டியதாகவும், அதன் பேரில் அலுவலகத்திற்கு ஏசி வாங்கி தான் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை 

மேலும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடமும் விசாரணை மேற்கொண்ட தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் அவர்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து கொண்டார். காவல்துறை வாகனம் பறிக்கப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்ததாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்கள் மட்டுமே செய்தியாளர் சந்திப்பு மற்றும் செய்தி குறிப்புகள் வெளியிட வேண்டும் என்ற விதியை மீறி தன்னிச்சையாக டி.எஸ்.பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்ததால் காவல்துறை விதிகளை மீறியதும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையிலும் காவல்துறையின் விதிகளை மீறி செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாகவும், டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க (தற்காலிக பணியிடை நீக்கம்) செய்ய பரிந்துரை செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் திருச்சி மத்திய மண்டல ஐஜிக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் மயிலாடுதுறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.