திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழஅன்பில் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கட்டுத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு கடந்த 20-ந்தேதி இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெற வேண்டும். ஆனால், ஒரு சமூகத்தினர் தங்களது தெருவுக்கும் சாமியை திருவீதி உலா அழைத்து வர வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் கோவில் திருவிழா நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கலவரத்தை சுட்டிக்காட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.டி.ஓ.வுக்கு அறிக்கை அளித்துள்ளார். அதேநேரம் தற்போது கோவில் திருவிழாவை நடத்த முடியாது என்று இந்து சமய அறநிலைய துறையும் தெரிவித்து விட்டது. அந்த உத்தரவை மீறி ஒரு பிரிவினர் தன்னிச்சையாக திருவிழா நடத்த ஏற்பாடு செய்துவருவதாக கூறப்படுகிறது. அவர்கள் திருவிழா நடத்தினால் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினை செய்து சாதிகலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று லால்குடி தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும் இதற்கிடையே மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், கீழ அன்பில் பகுதியில் உள்ளவர்கள் குடும்பத்திற்கு 2 பேர் வீதம் நேற்று மாலை 5 மணிக்கு கூடி ஆச்சிராம வள்ளியம்மன் கோவிலிலும், சிவன் கோவிலிலும் அதிகாரிகள் காப்பு கட்டும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக வாட்ஸ்-அப் குழுவில் தகவல்கள் வெளியானது. இதனால் அந்த கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், கீழ அன்பில் மற்றும் கோவில்கள் உள்ள பகுதியில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்க திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரிந்துரை செய்தார். அதன்பேரில், ஆச்சிராம வள்ளியம்மன் கோவிலில் தற்போது தேர்திருவிழா நடத்தினால் இருதரப்பினரிடையே சாதி பிரச்சினை ஏற்படவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கருதி, லால்குடி தாலுகா மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம் மற்றும் கீழ அன்பில் ஆகிய வருவாய் கிராமங்களில் குற்றவியல் நடைமுறை சட்டம்-1973 பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து லால்குடி ஆர்.டி.ஓ. வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு நேற்று பிற்பகல் 2 மணி முதல் வருகிற 8-ந்தேதி பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்