திருச்சி - காரைக்குடி இடையே 89 கிமீ ரயில் பாதை ரூபாய் 90 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையை  தென் சரக ரயில்வே பாதுகாப்பு  ஆணையர் அபய் குமார் ராய் நேற்று (17.02.2022) ஆய்வு செய்தார். 






பாதுகாப்பு ஆணையரது ஆய்வு ரயில் திருச்சியில் இருந்து காலை 09.15 மணிக்கு புறப்பட்டது. முதலில் திருச்சி குமாரமங்கலம் புதூர் - அய்யம்பட்டி, வெள்ளனூர் - காவேரி நகர் ரயில்வே கேட்கள், குமாரமங்கலம், புதுக்கோட்டை ரயில் நிலையங்கள், கீரனூர் அருகே குறுக்கிடும் மின் வழித்தடம், கீரனூர், நமணசமுத்திரம் உப மின் நிலையங்கள், புதுக்கோட்டை தாவூத் மில் கிராமம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம், பாம்பாறு ரயில் பாலம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயிலை நிறுத்தி ஆய்வு செய்தார்.



 

ஆய்வு ரயில் காரைக்குடி ரயில் நிலையத்திற்கு மாலை 03.15 மணிக்கு வந்து சேர்ந்தது. காரைக்குடி ரயில் நிலையத்தில் 25000 வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சப்படும் ரயில் பாதை பகுதிகளை பொதுமக்கள், பயணிகள் நெருங்க வேண்டாம் என எச்சரிக்கை விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். பின்பு ரயில் பாதை பராமரிப்புப் பணியாளர்கள் மின் ரயில் பாதையில் பணியாற்றுவதற்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என பணியாளர்களை கேட்டு தெரிந்து கொண்டார்.



 


 

தொடர்ந்து மின்சார இன்ஜின் பொருத்திய ரயிலில் காரைக்குடியில் இருந்து  மாலை 04.20 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை  சோதனை வேக ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஆணையருடன் முதன்மை மின்சாரப் பொறியாளர் எம். ராஜமுருகன்,  மின்மயமாக்கல் திட்ட இயக்குநர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.