நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் இறுதியாக 12 ஆயிரத்தி 607 பதவியிடங்களுக்கு  57 ஆயிரத்தி 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளார்கள் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.




100 வார்டுகளை கொண்ட மதுரையில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் தூள் கிளம்பியது. சீமான், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என பலரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடைசி நாளான இன்று மதுரை தே.மு.தி.க சார்பாக பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ”தேர்தல் வந்ததால் தான் மகளிர் உரிமை தொகையை தருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் ஏமாற்றினால் தமிழகத்தில் எங்கும் வரவே முடியாது” என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.





மதுரை மாநகராட்சியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குளம், ஜவகர்லால் நேரு நகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது பிரச்சாரத்தின் போது பிரேமலதா..., ”கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளார். மதுரை மக்களை நலம் விசாரிக்க சொன்னார் விஜயகாந்த். ஆட்சி, அதிகார, பண பலத்தை எதிர்த்து தே.மு.தி.க., வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். எல்லா வார்டுகளிலும் பணம் கொடுப்பதில் தான் தி.மு.க.வும், அ.தி.மு.கவவும் நினைக்கிறது. இரு கட்சிகளும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் கடந்த 50 ஆண்டுகளாக எடுக்கவில்லை. பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்ற நிலையில் வழங்கப்பட்டன. 1000 ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர்.



தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளும் 60 ஆண்டுகளாக பொய் வாக்குறுதிகளை மட்டுமே தெரிவித்து ஆட்சி அமைத்து வருகின்றனர். விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்து இருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாற்றப்பட்டு இருக்கும். ஏன் மக்கள் மறந்தார்கள் என தெரியவில்லை. இனியும் எங்களுக்கென்று ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் வந்த காரணத்தால் 1000 ரூபாயை விரைவில் தருவதாக ஸ்டாலின் சொல்கிறார்.

மகளிர் உரிமை தொகையை கொடுக்காமல் மீண்டும் ஏமாற்றினால் முதலமைச்சரால் தமிழகத்தில் எங்கும் வரவே முடியாது. நல்லா இருந்த மதுரை சிட்டியை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சீரழித்தது மட்டுமே மிச்சம்” என வேதனை தெரிவித்தார்.