நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்ற வெளிநாட்டவர் சிங்காநல்லூர் பகுதியில் பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொழில் நிமித்தமாக கோவை வந்துள்ள ருமேனிய நாட்டைச் சார்ந்த ஸ்டெஃபன், தோளில் திமுக துண்டு அணிந்தவாறு, சாலையில் நடந்து சென்றும், இரண்டு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணித்தும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து திமுகவுக்கு ஆதரவு திரட்டினார். இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திமுகவை சேர்ந்த மருத்துவர் கோகுல் என்பவரின் நண்பரான ஸ்டெஃபன், தனது நண்பரின் மூலம் தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி அறிந்து பரப்புரையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.




இது குறித்து ஸ்டெஃபன் கூறும் போது, “திமுகவிற்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன். ஏனெனில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. இத்திட்டத்தினால் ஏழை மக்கள் மிகவும் பயனடைவார்கள். அவர்களது பணம் மிச்சமாகும். அதனால் திமுகவிற்கு ஆதரவாக துண்டு பிரச்சுரங்களை மக்களுக்கு வழங்கி ஆதரவு திரட்டினேன்” என அவர் தெரிவித்தார்.




வெளிநாட்டவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இம்கிரேசன் துறை அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஸ்டெபனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் ஏற்புடையதாக இல்லையெனில் 1946 வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சியில் பல முனை போட்டி இருந்தாலும் திமுக, அதிமுக இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.