பால் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்டவைகளை உயரும் என்றும், திமுகவினர் மக்களுக்கு பரிசு கொடுக்க காத்து இருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு பதிலளித்த கே என் நேரு கூறியதாவது :
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்றவில்லையா? ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் வரும்பொழுது மக்கள் அதை சந்திக்கத்தான் வேண்டும். வேண்டுமென்றே யாரும் யார் மீதும் திணிப்பது அல்ல. அரசு ஊழியர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள் எவ்வளவுதான் மானியம் கொடுப்பது இயலாத ஒன்று அதில் சிறிதளவு மாற்றம் வரும் அதை முதல்வர் முடிவு எடுப்பார் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது, விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை தட்டிப் பறிக்கக் கூடாது, மேலும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29,தேதிகளில் போராட்டம் நடத்தபப்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு மாநில தொழிற்சங்கங்களிடம் ஆதரவு கோரியிருந்தன.
இதனையடுத்து, மார்ச் 28 அன்று நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், கூட்டுறவுத்துறை, நீதித்துறை, தொழில் பயிற்சி அலுவலர்கள் சங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம், சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்கம், நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம், கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டு 70க்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் அரசுப் பணியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் பிடிக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதோடு, மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது எனவும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை கூறியிருக்கிறது. இதே போன்று மின்சாரத்துறையும் அதன் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், மார்ச் 28, 29 ஆகிய தேதியில் அரசுப்பணியாளர்களுக்கு எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், விடுப்பு எடுத்தால் 10.30 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், இந்த இரண்டு நாள்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்களை துறை வாரியாக அனுப்பி வைக்கவும், அனைத்துத் துறைச் செயலாலர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்