தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் தாங்கமுடியாத அளவில் இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவுரை வழங்கினார். அதன்படி  சூழலில், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பயணத்தின்போது குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமுள்ள பருத்தி ஆடைகளை அணியவேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்துக்குச் செல்லலாம். அதிகளவிலான நீர் பருக வேண்டும். மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். கோடையில் குளிர்ந்த நீரால் குளிப்பது நன்மை அளிக்கும். சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகளை திரைச் சீலைகளால் மூட வேண்டும். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.மது, வாயு நிரப்பப்பட்ட குளிர்பானம், அளவுக்கு அதிகமாக தேநீர் மற்றும் காபி, அதிகளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து, பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக உயர்ந்தது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். வெயில் நேரத்தில் சாலையில் சென்ற பலரும், மிகுதியான வெப்பத்தை தாங்க முடியாமல் திணறினர்.




இந்நிலையில் திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராஜாமணி (வயது 58). இவரும், இவரது கணவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது. இந்த நிலையில் திடீரென்று ராஜாமணி மயங்கி விழுந்தார். இதை கண்ட ராமர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனயில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண