மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 29.08.2025 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
யார் தகுதியானவர்கள்?
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற, 30.06.2025 அன்று ஐந்து வருடங்கள் முடிவடைந்த (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாக புதுப்பித்துள்ள) பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று 30.06.2025 அன்று ஒரு வருடம் முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயது உச்ச வரம்பு ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப்பிரிவினருக்கான உதவித்தொகை விவரம்
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை (SSLC-Failed) உள்ளவர்களுக்கு மாதம் ரூ.200/-
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி (SSLC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-
- மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-
- பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-
இந்த உதவித்தொகை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
வயது மற்றும் வருமான வரம்பு (பொதுப்பிரிவினருக்கு)
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
- குடும்பத்தின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விவரம்:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-
- மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-
- பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000/-
- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தகுதியற்றவர்கள் யார்?
- ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள்.
- பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்கள்.
- அரசுப்பணியில் உள்ளவர்கள் அல்லது தனியார் துறையில் ஒருமுறையாவது பணியில் சேர்ந்து ஊதியம் பெற்றவர்கள் அல்லது பெறுபவர்கள்.
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மற்றும் அரசின் வேறு ஏதேனும் திட்டத்தில் உதவித்தொகை பெறுபவர்கள்.
- எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது பயில்பவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய பதிவுதாரர்கள், தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
- வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை
- பள்ளி, கல்லூரிகளின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்
- குடும்ப அட்டை
- ஆதார் அட்டை
- சாதிச்சான்றிதழ்
- தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் தங்கள் பெயரிலுள்ள வங்கிக் கணக்குப் புத்தகம்
அணுக வேண்டிய முகவரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
2வது தெரு, பாலாஜி நகர்,
பூம்புகார் சாலை,
மயிலாடுதுறை-1.
விண்ணப்பப் படிவத்தை அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்பவர்கள் 04364-299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு உரிய அறிவுரை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 29.08.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.