திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக குறைதீர் கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று குறைதீர் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  நடத்தப்பட்டது.  இந்த குறைதீர் கூட்டத்திற்கு முன்பாக அவர்களுக்கு தேவையான ஆதார் அட்டை,காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய அடையாள அட்டை எடுப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை குறித்து  மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து மனுவாக அளித்தனர்.


மேலும் திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியில் திருநங்கைகளுக்கு என இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டபட்டுள்ள நிலையில் அதன் அருகில் இருக்கக்கூடிய அரசு புறம்போக்கு நிலத்தில் திருநங்கைகளுக்கான தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும். பொது சுடுகாட்டில் நல்லடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நாகர்கோவிலில் திருநங்கைகளுக்கு என தனி சுடுகாடு உள்ள நிலையில் எங்களுக்கும் திருநெல்வேலியில் தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.


திருநங்கை சாம்பவி பேசுகையில், திருநெல்வேலியில் ஜாதி ரீதியான பாகுபாடுகள் இன்று வரை உள்ள நிலையில் ஜாதி ரீதியான சுடுகாடுகள் உள்ளது, ஆகையால் திருநங்கைகள் இறந்த பிறகு அவர்களை எரிப்பதிலும் நல்லடக்கம் செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது, எனவே  எங்களுக்கென தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.