தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சித்தன்நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி நல்லமாடி. இருவரும் கூலி தொழிலாளர்கள். இந்த தம்பதியின் மகள் தங்கமாரியம்மாள் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு பயின்று வருகிறார். பெருமாள்சாமி வசித்து வரும் வீட்டிற்கு பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லமால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். அதிலும் மாற்றுதிறனாளியான தனது மகளை வைத்து கொண்டு சிரமப்பட்டு வந்தனர். மேலும் அருகில் உள்ள மெயின்சாலையும் சேதமடைந்து காணப்பட்டதால் பெருமாள்சாமி தம்பதியினர் தங்களது மகள் தங்கமாரியம்மாளை அரைகிலோ மீட்டர் வரை தூக்கி கொண்டு அதன்பின்னர் ஆட்டோவை வரவைத்து தான் எங்கும் வெளியில் அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை.
பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து நிறைவேறாத நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்கமாரியம்மாள், தங்களது தெருவில் உள்ள சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.கி.செந்தில்ராஜ், சாலையை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
இதையெடுத்து ஊராட்சி நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் மெயின் சாலையில் இருந்து பெருமாள்சாமி வீடு வரைக்கும் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சரியான சாலை வசதி இல்லமால் அவதிப்பட்டு வந்த தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது கோரிக்கை மனுவினை ஏற்று கனிவுடன் பரீசிலனை செய்து நடவடிக்கை எடுத்து பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினை தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Crime: குக்கரால் அடித்துக் கொல்லப்பட்ட பேராசிரியர்.. 18 வயது காதலனுடன் கைதான மனைவி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்