தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ளது கரிசல்குடியிருப்பு கிராமம்.  இந்த கிராமத்தில் நேற்று காலை 6 மணி அளவில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இந்த ஒற்றை யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, குறிப்பாக விவசாய நிலங்களில் அதிகம் உள்ள அப்பகுதியில் காட்டுயானையானது சுற்றி வந்த நிலையில் அது திரும்ப செல்லாமல் அங்கேயே சுற்றி திரிந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். அதோடு ஊர் அருகே உள்ள குளத்தை சுற்றி சுற்றி யானை உலா வந்த நிலையில் அங்கு விவசாய நிலங்களுக்குள் செல்ல முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.




இந்த நிலையில் நேற்று காட்டு யானை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். வனத்துறையினர் பட்டாசு சத்தம் உள்ளிட்ட சத்தங்களை எழுப்பி யானை ஊருக்குள் நுழைய விடாமல் திசை திருப்பி வந்தனர். தொடர்ந்து வனத்துறையினரின் பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்த நிலையில், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. தொடர்ந்து, சுமார் 15 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு யானையை வனத்துறையினர் கரிசல்குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டிய நிலையில், அந்த யானையானது அடுத்து உள்ள ஊர்களான வடகரை - அண்ணாநகர் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் முகாமிட்டது. ஊர் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் யாரும் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தாமல் பத்திரமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி வாயிலாக வலியுறுத்தி வந்தனர். மேலும் கரிசல் பகுதியில் காட்டுயானை வழி தவறி சுற்றிக் கொண்டிருந்த நிலையில் யானையை பாதுகாப்பாக காட்டிற்கு விரட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் காவல்துறை மற்றும் வனத்துறை கேட்டுக் கொண்டதின் பேரில் கரிசல் பகுதியில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. 




இந்த நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் அங்கிருந்து வனத்திற்குள் விரட்டினர். தொடர்ந்து, அந்த பகுதியில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. ஒற்றை காட்டு யானை ஒன்று நேற்று முழுவதும் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், அனைத்து துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் முகாமிட்டு யானையை விரட்ட பகல் முழுவதும் முயற்சி செய்து வந்த நிலையில், எந்த முயற்சியில் பலனளிக்காத நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் காட்டு யானையானது விவசாயப் பகுதிக்குள் புகுந்து வனப்பகுதியை அடைந்ததாக வனத்துறையினர் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் நிம்மதியடைந்தனர். மேலும் யானை மீண்டும் ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.