உலகளவில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை செய்ய பிரதமர் மோடி தலைமையில் இன்று பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

மோடி தலைமையில் முக்கிய கூட்டம்:

ஜம்மு காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Continues below advertisement

பயங்கரவாத தாக்குதல் காரணமாக சவுதி அரேபியா அரசுமுறை பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. 

பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமருக்கு அஜித் தோவல் விளக்கினார். இந்த தாக்குதலுக்கு எந்த மாதிரியான பதிலடி கொடுப்பது, ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா எடுத்த அதிரடி முடிவுகள் என்ன?

கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் உடனான அட்டாரி எல்லையை மூட இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் உடன் போடப்பட்டிருந்த சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பயணம் செய்ய பாகிஸ்தானியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  • 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
  • அட்டாரி எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும்.
  • சார்க் விசா திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். SPES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு 48 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும்.
  • டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமான ஆலோசகர்கள் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும்.
  • இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெறவுள்ளது" என்றார்.