தென்காசியில் அமைந்துள்ளது சுரண்டை. இங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் இளம் தம்பதியினருக்கு ராஜமுகன் என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில், இன்று சிறுவன் ராஜமுகன் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.
தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பழனிக்கு சொந்தமாக அந்த சுற்றுவட்டாரத்தில் செங்கல் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், செங்கல் ஆலையில் உள்ள டிராக்டர் ஒன்று அந்த வழியே வந்து கொண்டிருந்தது. அந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன் மீது மோதி, சிறுவன் மீது ஏறியது. இதில், படுகாயமடைந்த 4 வயது சிறுவன் ராஜமுகன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், சிறுவனின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தினர் மிகவும் சோகமடைந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த 4 வயது சிறுவனின் பெற்றோர்கள் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுரண்டை காவல்துறையினர், டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுநரை கைது செய்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
டிராக்டர் மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Crime: பீகார்: 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கொலை: சிசிடிவி உதவியால் போலீசிடம் வசமாக சிக்கிய வாலிபர்
மேலும் படிக்க: Crime : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொலை...மது போதையில் இளைஞர் செய்த வெறிச்செயல்...