Thirumangalam Metro Station: ஜப்பான், சீனாவில் உள்ள ரயில் நிலையங்களில் இருப்பது போன்ற வசதிகளுடன் பிரம்மாண்டமாக மாற உள்ளது திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம். ஏற்கனவே கட்டப்பட்ட திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே A,B,C மற்றும் D என 4 டவர்கள் கட்டப்பட இருக்கின்றன. சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளின் ஒரு பகுதியாக கட்டப்படும் புதிய திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒரு தளத்தில் ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள், உணவகங்கள் ஆகியவை வர இருக்கின்றன. மற்றொரு தளத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டம் - Chennai metro rail phase 2 project
சென்னை நகரத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, முதல் கட்டத்தில் 41 நிறுத்தங்களுடன் 54.1 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, 118.9 கி.மீ. தூரத்திற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளின் ஒரு பகுதியாக திருமங்கலத்தில் மற்றொரு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. ஜப்பானில் உள்ள கோகுரா, சீனாவில் உள்ள சோங்கிங் ரயில் நிலையங்களில் இருப்பது போன்று ஒரு தளத்தில் ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள், உணவகங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன.
திருமங்கலம் புதிய மெட்ரோ ரயில் நிலையம் - New Thirumangalam Metro rail station:
அண்ணா நகர் மேற்கு டிப்போ எதிரே பழைய திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3.85 ஏக்கர் நில பரப்பில் புதிய திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. பழைய திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே A,B,C மற்றும் D என 4 டவர்கள் கட்டப்பட இருக்கின்றன.
3 கீழ் தளம், 1 தரைத்தளம், 9 மேல் தளங்களுடன் டவர் A மற்றும் C அமைய இருக்கிறது. டவர் B-இல் அமைய உள்ள ரயில் நிலையம் 1 தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் கட்டப்பட உள்ளன. டவர் D-யை பொறுத்த வரை, அங்கு ஒரு தரைத்தளம் மற்றும் 2 மேல் தளங்கள் அமைய இருக்கின்றன.
வியக்க வைக்கும் அசத்தல் வசதிகள் - Features of New Metro rail station:
டவர் B-யின் மூன்றாவது தளத்தில் மக்கள் கூடுமிடமும் நான்காவது தளத்தில் நடைமேடையும் கட்டப்பட உள்ளது. டவர் A,B மற்றும் C ஆகியவற்றின் தரை தளங்களில் பல்வேறு கடைகள் வர இருக்கின்றன. முதல் இரண்டு தளங்களில் ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளது. அலுவலகங்களுக்கு என 5 முதல் 9ஆவது தளம் வரை இடம் ஒதுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் (CMRL) இயக்குநர் அர்ஜூனன் கூறுகையில், "கோகுரா ரயில் நிலையம், போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. நில கிடைக்கும் தன்மையைப் பொறுத்து, முடிந்தவரை பல இடங்களில் இந்த உத்தியை அமல்படுத்த நாங்கள் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
ரயில் நிலையத்திற்குள் ஆபீஸ்:
திருமங்கலம் புதிய ரயில் நிலையத்தில் கட்டிடங்கள் வழியாக ரயில்கள் செல்ல உள்ளதால் மக்கள் தடையற்ற பயணத்தை பெறுவார்கள். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு தளத்தில் அலுவலகம் சென்றுவிட்டு மற்றொரு தளத்தில் ரயில் ஏறுவதுதான்" என்றார்.
ஜோன்ஸ் லாங் லாசல்லே பிராபர்டி கன்சல்டன்ட் என்ற முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இந்திய தலைவர் சங்கர், இதுகுறித்து விரிவாக பேசுகையில், "அலுவலக இடங்களுக்கு அதிக தேவை இருக்கும் நேரத்தில், மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் அவற்றைக் கட்டுவது சிறந்த வழியாகும். தங்கள் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தனியே செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால் நிறுவனங்கள் அதை விரும்பலாம்" என்றார்.