தென் மாவட்டங்களில் தொடர் மழை

 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டிஅதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளிப்பதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 80க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தென் மாவட்டங்களில் தொடர் மழை, வெள்ளம் எதிரொலியால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.





 

மழை காரணமாக பல ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி - செங்கோட்டை பிரிவில் இரு மார்க்கத்திலும் திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் 18 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 அன்று ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக இருந்து செய்யப்படுகிறது.



 

டிசம்பர் 18 அன்று இயக்கப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் - திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ‌ டிசம்பர் 18 அன்று நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும். அதேபோல கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும். நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் டிசம்பர் 18 அன்று மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் திண்டுக்கலில் இருந்து இயக்கப்பட்டது. கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்து இயக்கப்படும். திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்பட்டது. திருநெல்வேலி, மானாமதுரை, பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட வேண்டிய செங்கோட்டை - தாம்பரம் ரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.