தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம் (34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளனர். அப்போது லேசான வயிர் எரிச்சல் ஏற்படவே அருகில் இருந்த கடையில் 10 ரூபாய் விலையில் உள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படவே, உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் இருவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


 

                                                         


 

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். மேலும் கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன், ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் கற்பகம் வீடு, குளிர்பானம் மற்றும் கிரேவி வாங்கிய கடையில் விசாரணை நடத்தினர்.

 


     


 

மேலும் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் குளிர்பானம் பாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். சிக்கன் கிரேவி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வுக்கு பின்னர் கிரேவி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.