தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளுக்கும்  சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே போல் துறைமுகத்தின் பி பிரிவு துறைமுகமான பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு காய்கறி, அரிசி பருப்பு முதல் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், செங்கல், மணல் மற்றும் கருங்கற்கள், தென்னை கன்றுகள், அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


                                  

 

தீவுக்கூட்டம் அதிகமான பகுதியான மாலத்தீவு பகுதிகளில் ஆண்டுதோறும் கட்டுமான பணிகள் நடைபெறுவது உண்டு. இதனால் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் இப்பகுதியில் கடலுக்குள் கருங்கற்களை போட்டு கடல் அரிப்பை தடுத்து நிறுத்தும் பணிகளுக்கு கருங்கற்கள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. 

                                  

 

இதற்காக தூத்துக்குடியில் இருந்து பார்ஜி எனப்படும் இழுவை கப்பல் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் டன் கருங்கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனங்கள் இப்பணிகளை செய்து வருகிறது. இதற்காக தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் தூத்துக்குடி கொண்டு வரப்படுகிறது. பின்னர் பழைய துறைமுகம் வழியாக மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


                                  

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.தமிழகத்தின் கனிமவளம் இவ்வாறு தொடர்ச்சியாக அதிகளவு கொண்டு செல்லப்படுவதால் கனிமவளங்கள் அழிக்கப்படும் நிலை உள்ளதாக கூறுகின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.


                                  

 

ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இருந்து கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கனரக லாரிகள் மூலம் கேரளாவில் அமைக்கப்பட்டு வரும் தனியார் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருவதால் குமரியில் கனிமவளம் கொள்ளை போவதை தடுக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பல்லாயிரக்கணக்கான டன் கருங்கற்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு முறைப்படுத்த வேண்டும் என்கின்றனர். மாலத்தீவு 2100 ஆம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் நிலை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் சமீபத்தில் கடலுக்கு அடியில் அழிவை தடுப்பது குறித்து ஆலோசனை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.