தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரள மாநிலங்களில் அதிகரித்தள்ளது. இதனால் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்தும் கணிசமாக அதிகரித்து  வருகிறது. கடந்த சில நாட்களாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து  தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 



 

கடந்த சில நாட்களாக வினாடிக்கு 13,000 கன அடியாக நீர்வரத்து குறைந்திருந்தது.  ஆனால் தற்போது கர்நாடக, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 13,000 கன அடியிலிருந்து, 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 100 நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது.

 



 

மேலும் கேரள மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கபினி அணைக்கு  நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு, செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கு திறக்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும். ஆனால் கர்நாடக மற்றும காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அந்த கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி ஆற்றில் மாதா மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.