தமிழக வரலாற்றிலேயே டீசல் விலை 100ஐ தாண்டியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.  இந்நிலையில் தமிழக அரசு மக்களின் வேதனையைக் கண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து பெட்ரோல் டீசலில் 3 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை ஏற்றி வருவதால் தமிழகத்தில் டீசல் விலை கடலூர் மாவட்டத்தில் 100ஐ தாண்டி விற்பனை ஆகிறது .





சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ. 103.1 ஆகவும், டீசல் விலை  ஒரு லிட்டர் ரூ.98.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  ஆனால் சென்னையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கடலூரில் பெட்ரோல் விலை  லிட்டர் ரூ. 105.1 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 100.88 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல் கடலூர் மாவட்டத்தின்  பல்வேறு இடங்களில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை ஆகிக்கொண்டு உள்ளது.  இந்த டீசல் விலை தமிழகத்திலே கடலூரில் தான் அதிகமாக விற்பனை ஆகிறது,  இந்த விலையேற்றம் கடலூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 100 ரூபாயை கடந்து விற்பனை ஆகும் நிலை ஏற்படும்.




நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் என்பது பொது மக்களிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் இன்னும் சிறிது காலத்தில் மக்களிடையே பெரும் பொருளாதார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் இதனை சீராக்க தமிழகத்தில் எப்படி வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களோ அதேபோல் மத்திய அரசும் மற்ற மாநிலங்களும் ஒன்றாக இணைந்து வரியை குறைத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியும் என பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் முரளி தெரிவித்துள்ளார். தற்பொழுது தான் மக்கள் கொரோனா ஏற்படுத்திய தாகத்தில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகின்றனர், இந்நிலையில் இவ்வாறான விலை ஏற்றம் என்பது அனைத்து பொதுமக்களையும் வெகுவாக பாதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.