அசானி புயல் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் இரவு முழுவதும் சூறை காற்றுடன் கனமழை. குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் அசானி புயல் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவு மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்தது. மாம்பழத்துறையாறு, அணைகிடங்கு, புத்தன்அணை, இரணியல், குருந்தன்கோடு, பூதப்பாண்டி, குளச்சல், மயிலாடி பகுதிகளிலும் மழை பெய்தது. மாம்பழத்துறையாரில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் அருவியில் குளிப்பதற்காக மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.58 அடியாக உள்ளது. அணைக்கு 155 அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.35 அடியாக உள்ளது. அணைக்கு 91 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.32 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 18.20 அடியாகவும், சிற்றாறு1 அணையின் நீர்மட்டம் 9.94 அடியாகவும், சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 10.04 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று அணை நீர்மட்டம் 6 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். செண்பகராமன்புதூர் ஆரல்வாய்மொழி இறச்சகுளம் பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இறச்சகுளம் பகுதியில் மின்கம்பம் சாலையில் சரிந்து விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வடசேரி அம்மா உணவகத்தின் பின்புறம் நின்ற ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் முறிந்த விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். கல்கோவில் பகுதியிலும் சூறைக்காற்றிற்கு மரம் முறிந்து விழுந்தது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‛சாப்பாடா... இது? வாய்ல வைக்க முடியல...’ துணைவேந்தர் வீட்டில் விடிய விடிய தர்ணா நடத்திய பல்கலை மாணவிகள்!