ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்லுறவைப் பேணும் வகையில்  திருச்செந்தூர் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு  கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர். 




தமிழகத்தில் மாணவர்களுக்கிடையே மட்டுமன்றி  ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே அவ்வப்போது முட்டள்களும் மோதல்களும் இருந்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்க முயல்வதும்,  ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் செயல்களும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில்  பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. 




இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்லுறவை பேணும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கறி விருந்து வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருச்செந்தூர் அருகிலுள்ள கீழ நாலு மூலை கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இங்கு ஆறு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில்  கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள்  நடைபெற்று நிலையில் மாணவர்கள் ஒருவிதமான மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். 




இந்தநிலையில் தற்போது தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் கோடை விடுமுறையை கவனத்தில் கொண்டும்,  மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும்,  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும்  வகையிலும் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி தலைமையில்  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கறி விருந்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.  




அந்த வகையில் இன்று பள்ளியில் பயிலக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் கறி விருந்து வைக்கப்பட்டது. ஆசிரியர்களின் இந்த திடீர் கறி விருந்தினால் திக்குமுக்காடிப்போன மாணவர்கள் மகிழ்ச்சியாக கறி விருந்தினை சுவைத்து உண்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  கீழநாலுமூலைக்கிணறு ஊர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


கீழ நாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். சுமார்  60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் ஐந்து வகுப்பறை கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே  உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டிடம் பழுது காரணமாக பயன்பாட்டில் இல்லாத  பழமையான பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.  தொடர்ந்து நான்கு வகுப்பறை கட்டிடங்கள் இருந்த நிலையில்   இரண்டு பழமையான கட்டிடங்கள் மிகவும் சேதமாகி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்துள்ளது.  இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையினால் இரண்டு பள்ளி கட்டிடங்களில்  முழுவதுமாக  மழைநீர் ஒழுகி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.   இதனால் மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து கல்வி பயில முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து  உடனடியாக மழைநீர் ஒழுகக்கூடிய கட்டிடத்தையும்,  பழுதடைந்த கட்டிடங்களையும் அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள்  அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் தங்கள் பள்ளியில் பயிலக் கூடிய தங்கள் பகுதி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அதவா தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன்  ஊர் பொது  மக்களே  தங்களின் சொந்த முயற்சியில் நிதி திரட்டி ரூபாய் 3 லட்சம் மதிப்பில் தகரத்தால் ஆன மூன்று வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.