காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் நள்ளிரவு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதியில் நேற்று வழங்கப்பட்ட இரவு உணவு சரியில்லாத காரணத்தாலும் தொடர்ந்து குடி தண்ணீர் தட்டுப்பட்டால் விரக்தி அடைந்த மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரவு நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் துணை வேந்தர் வீட்டை முற்றுகையிட்டு நள்ளிரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



 

தொடர்ந்து சரியான உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு குடி தண்ணீர் வாகனம் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது. இனி இதுபோன்று தவறு நடக்காது என உறுதி அளித்ததின் பேரில் அங்கு இருந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.



துணை வேந்தர் வீட்டை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து மாணாவிகள் சிலர் பேசுகையில்..,” பல்கலைகழகத்தில் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் உள்ளது. இதனை விரைவில் சரிசெய்யவேண்டும். நேற்று இரவு முற்றுகை போராட்டம் நடத்திய பின் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டது. தண்ணீருக்காக தினமும் போராட்டம் செய்ய முடியாது. எனவே தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை வேந்தர் எங்களின் கோரிக்கைகளை நிரந்தரமாக நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.

மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர்கள் விடுதியில் மோசமான உணவு வினியோகிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

தற்போது புதிய துணைவேந்தர் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அவர் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த போராட்டத்தை மாணவிகள் முன்னெடுத்துள்ளனர். துணை வேந்தர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!