சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் 44 வது செஸ் ஒலிம்பியா போட்டிக்கான தீபம், இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000-க்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் தீபம்:
இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து இன்று கன்னியாகுமரி வந்தடைந்தது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸ் வசம் தமிழக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் ஒப்படைத்தனர். முன்னதாக காந்தி மண்டபத்தில் இருந்து பேரணியாக வந்த தீபத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து கொண்டு வந்து அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ,விளையாட்டு வீரர்கள் , அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்