தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட ஆலை சுண்ணாம்புகல் குவாரியினால் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஊரை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த குவாரியை தடை செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 




 


 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல வெங்கடேஸ்வரபுரம், சில்வர்பட்டி, கம்பத்துபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனம் நிலங்களை வாங்கி சிமெண்ட் தயாரிக்க தேவையான சுண்ணாம்புகல் எடுக்கும் குவாரிகளை அமைத்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அந்த குவாரியில் வெடி வைத்து சுண்ணாம்பு கல் எடுத்து வருவதால் அருகில் உள்ள மேல வெங்கடேஸ்வரபுரம் கிராமம் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


 


 



வெடித்து வைத்து சுண்ணாம்பு கல் எடுக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் எல்லாம் சேதமடைந்துள்ளதாகவும், விவசாய பணிகள் செய்ய முடியமால் விவசாயம் முற்றிலுமாக போய் விட்டதாகவும், மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீரின் சுவையும் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சுண்ணாம்பு கல் குவாரினால் நிலம், நீர் விவசாயம் என முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் பலரும் ஊரை காலி செய்து வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். 100 குடும்பங்கள் வரை இருந்த கிராமத்தில் தற்பொழுது 25 குடும்பங்கள் தன் இருப்பதாகவும், மற்றவர்கள் ஊரை காலி செய்து வெளியூர்களில் பிழைப்பு தேடி சென்றுவிட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர்.


 




தனியார் சிமெண்ட் ஆலை குவாரியினால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தங்கள் கிராமத்திற்கு அந்த தனியார் சிமெண்ட நிறுவனம் எவ்வித உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். சுண்ணாம்பு குவாரியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும், தனியார் சிமெண்ட் ஆலை நிறுவனம் தங்கள் கிராமத்திற்கு எவ்வித வளர்ச்சி பணியும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். இருக்கின்ற குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ வேண்டும் என்றால் தனியார் நிறுவனம் தங்கள் கிராமத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும், இல்லையென்றால் அரசு அந்த குவாரியை தடை செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தனியார் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினை கண்டித்து அக்கிராம மக்கள் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.




தனியார் சிமெண்ட் ஆலை சுண்ணாம்பு கல் குவாரியினால் பல குடும்பங்கள் ஊரை விட்டு காலி செய்யவிட்ட நிலையில் இருக்கின்ற மக்களை காப்பாற்ற கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தனியார் சிமெண்ட ஆலை நிர்வாகம் செய்ய வேண்டும், இல்லையென்றால் சென்னை தலைமை செயலகத்தினை முற்றுக்கையிட்;டு போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்டி கொடுக்கும் தனியார் சிமெண்ட ஆலை, அந்த ஆலையினால் பாதிக்கப்பட்ட தங்கள் கிராமத்திற்கு எவ்வித உதவிக்கரமும் நீட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.