கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டீ கடையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் டீ குடிக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர் என 8 பேருக்கு தீக் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் அடி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர்கள் ராஜேஷ் மற்றும் சபீக் (37). இவர்களது டீ கடை இரவு முழுவதும் செயல்படும். இந்நிலையில் இன்று விடியற்காலையில் கடையில் டீ வியாபாரம் நடந்து கொண்டு இருந்த போது, கடையிலுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. சுதாகரித்து கொண்ட டீ மாஸ்டர் உட்பட கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியுள்ளர். இந்நிலையில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது.
இதில் டீ குடிக்க வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் வேடிக்கை பார்க்க வந்தவர் ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்தில் வந்த தீயணைப்பு துறையினர் டீக்கடையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த 8 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 20 நிமிடங்களுக்கு மேலாக சிலிண்டரில் தீ பற்றி எரிந்துள்ளது. அதனை அணைக்காமல் டீக்கடை இயங்கி வந்த நிலையில் அதிக வெப்பம் காரணமாக சிலண்டர் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டீ கடையில் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்