தூத்துக்குடியில் கழிவுநீர் வடிகாலாக செயல்படும் பக்கிள் ஓடை முழுவதும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் சூழ்ந்து காணப்படுவதால் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி காணப்பட்டு சுகாதார சீர்கேடு அபாயம் நிலவி வருகின்றது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் கடலுக்கு செல்வதற்காக பக்கிள் துரை என்ற ஆங்கிலேய அதிகாரியால் இந்த ஓடை அமைக்கப்பட்டது. இதனால் அவரது பெயரிலேயே இன்றளவும் இந்த ஓடை அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் பக்கிள் ஓடை சாக்கடை கால்வாயாக மாறியது.
தூத்துக்குடியின் கூவம் என்றழைக்கப்படும் பக்கிள் ஓடையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடுத்து அகற்றப்பட்டது. அப்போது பார்வையிட வந்த அப்போதைய உள்ளாட்சி அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கிள் ஓடையை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பக்கிள் ஓடை திரேஸ்புரம் கடற்கரை முதல் 3-ம் மைல் வரை சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு சீரமைக்கப்பட்டது.
தொடர்ந்து ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேங்கிய மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆபத்பாந்தவனாக திகழ்கிறது. முன்பு உபரி நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட இந்த ஓடை தற்போது நகரின் மொத்த கழிவுகளை சுமந்து கொண்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக கடலில் கலக்கிறது. பக்கிள் ஓடையில் கழிவு நீர் மட்டுமல்ல அனைத்து கழிவுகளும் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் தங்களது மீன்பிடி படகினை நிறுத்தி வைக்கப்பட்டு படகினை கடலுக்குள் கொண்டு செல்ல வேண்டுமானால் இந்த கழிவுகளில் இறங்கி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆண்டுதோறும் மழைக்காலத்தின் போது தேங்கும் கழிவுகள் அகற்றப்படுவதும் தொடர்ந்து மீண்டும் கழிவுகள் சேர்வதும் அகற்றப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் அதிகப்படியாக தேங்கும் மழைநீரை அகற்றுவதற்காக செயல்படும் பக்கிள் ஓடை முழுவதிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் அமல செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் பக்கிள் ஓடை முழுவதும் தேங்கி கழிவுநீர் வடிந்து செல்லமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் சூழல் நிலவுவதால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்து தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் பக்கிள் ஓடையில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் அமலை செடிகளையும் அகற்றவும் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்