‛நேரிலும் தீட்சை பெறலாம்... போன் மூலமும் தீட்சை பெறலாம்’ என்கிற அன்றாட அழைப்போடு, தினந்தோறும் அருளாசிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா.


தினம் ஒரு திருக்குறள் மாதிரி, மணிக்கு ஒரு தத்துவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா. அந்த வகையில் இன்று ஆன்மிகம் என்றால் என்ன என்று கூறியுள்ளார். அதே டாபிக்கில் லட்சம் போஸ்ட் போட்டாலும், ஒவ்வொரு போஸ்டிலும் ஆன்மிகத்திற்கு ஒரு புதிய விளக்கத்தை கொடுத்து வருகிறார் அன்னபூரணி அரசு அம்மா. 


இன்றைய அவரது பேஸ்புக் அருளாசியில், ‛நல்லவன் எப்படி ஆன்மிக வாதி ஆக முடியும்’ என்று அவரே கேள்வி எழுப்பி, அதற்கு பதில் அளித்திருக்கிறார். இதோ அந்த பதிவு...




‛‛



நல்லவன் ஆன்மீகவாதி அல்ல.

இந்த சமுதாயத்தில் வாழும் பெரும்பாலோர் நல்லது செய்பவர்களையும், நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களையும், ஒழுக்கவாதிகளையும், பொய் பேசாமல் உண்மை பேசுபவர்களையும், தினமும் கோயிலுக்கும், மசூதிக்கும், சர்ச்க்கும் செல்பவர்களையுமே ஆன்மிகவாதி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.



இல்லை. நல்லவன் ஆன்மிகவாதி ஆக முடியாது. அதற்கு அவன் நல்லதையும் கடக்க வேண்டும். ஒரு கெட்டவன் எப்படி கெட்ட பண்புகளுக்கு ஆளாகி இருக்கிறானோ அதேபோல் நல்லவன் நல்ல பண்புகளுக்கு ஆளாகி இருக்கிறான் இதுவும் ஒரு பழக்கத்திற்கு அடிமையான விஷயமே. உலகத்திற்கு வேண்டுமானால் நல்லவனாக இருக்கலாமே தவிர ஆன்மிகத்திற்கு உதவ போவது இல்லை.



கெட்ட எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், நல்லவனாக வாழ வேண்டும். இதுவே ஆன்மிகம் என்ற தவறான வழிகாட்டுதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கெட்ட எண்ணங்கள் போன்று நல்ல எண்ணங்களும் ஆன்மிகத்திற்கு தடையே. உன்னை அடைத்து வைத்திருக்கும் சிறை இரும்பால் இருந்தால் என்ன? தங்கத்தால் இருந்தால் என்ன? இரண்டும் சிறைகளே.



இரண்டையும் உடைத்தெரிந்து எண்ணங்களற்று சுதந்திரனாக வாழ்வதே ஆன்மிகம். மனதை நல்ல பழக்க வழக்கங்களில் பழக்கி அதற்கு அடிமையாக, நல்லவனாக வாழ்வது ஆன்மிகமாகாது. மனதை கடந்து வாழ்வதே ஆன்மிகம். அறிவில் சிறந்தவனாக, வேத சாஸ்திரம் அறிந்தவனாக, நுனுக்கமான அறிவால் அனைத்திற்கும் விளக்கம் கூறிக்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அந்த அறிவிற்கு அடிமையாக வாழ்வது ஆன்மிகமாகாது. அந்த அறிவையும் கடந்து நிற்பதே ஆன்மிகமாகும்.



நல்லவனாக வாழ்வது தவறு என்று நான் கூறவில்லை. அது ஆன்மிகமாகாது என்றே கூறுகிறேன். நல்லவன் கெட்டவன், பாவி புனிதன் இவையெல்லாம் ஆணவத்தின் படைப்புகளே. இயற்கைக்கு இவைகள் என்னவென்றே தெரியாது. அதனால் ஆணவத்திடம் சிக்காமல் ஆணவத்தை விடுத்து இயற்கையில் (இயல்பில்) நிலைபெறுங்கள். இரண்டற்ற எதார்த்தம் என்னவென்று நீங்களே உணர்வீர்கள்.



- அன்னபூரணி அரசு அம்மா,’’

என்று அந்த பதிவில் அன்னபூரணி குறிப்பிட்டுள்ளார். 


ஆன்மிகத்தை அக்கக்காக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் அன்னபூரணி, விரைவில் எது ஆன்மிகம் என்கிற புத்தகத்தை எழுதினாலும் எழுதுவார் என்றே தெரிகிறது.