பைக்கில் செல்லும் இளைஞர்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தினால், அவர்களிடம் ஹெல்மெட் ஏன் போடல, லைசன்ஸ் இருக்கா என்று கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள் என்பது மட்டுமே நாமறிந்த செய்தி. ஆனால், ராமநாதபுரத்தில் ஒரு காவலர் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் அனி அருணை நிறுத்தி, “பேருந்தில் சென்றுகொண்டிருக்கும் மூதாட்டி ஒருவர், இந்த மருந்து பாட்டிலை மறந்து சென்றுவிட்டார். அவரிடம் இதை கொடுக்கமுடியுமா? என்றுகேட்க. அதற்கு அந்த இளைஞரும் சரியென்று கூறி பைக்கை வேகமாக ஓட்டிச் செல்கிறார். இந்த காட்சிகள் எல்லாம் பைக் ரைடர் அனி அருண் கேமராவில் பதிவானது. 


மேலும் அந்த வீடியோவில், அருணை நிறுத்தும் காவலர், “நீங்கள் கர்நாடகாவா” என்று கேட்க, அதற்கு அவரும் ’ஆம்’  என்று கூறுகிறார். பின்னர், அவரிடம், எதிரேவரும் பேருந்தைக் காட்டி, இதேபோல ஒரு பேருந்து இதற்கு முன்பாக சென்றுகொண்டிருக்கிறது, அதில் செல்லும் மூதாட்டியிடம் இந்த மருந்தை கொடுத்துவிடுங்கள் என்கிறார். அந்த பேருந்தை துரத்திப்பிடித்த அருண், பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறுகிறார். பேருந்து நிறுத்தப்பட்டதும், மூதாட்டியிடம் மருந்து பாட்டிலைக் கொண்டு சேர்க்கிறார். இதற்காக, ஓட்டுநர், மூதாட்டி உட்பட பேருந்தில் இருக்கும் பலரும் அருணுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். 


பைக் ரைடரான அனி அருண், சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து தென்காசிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் அவர் சென்றுகொண்டிருக்கும்போது, இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றுள்ளது. வீடியோவாக பதிவு செய்யப்பட்ட இந்த காட்சிகளை எல்லாம், அருண் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டபிறகே, இது வெளியுலகிற்கு தெரியவந்தது. காவல் அதிகாரி யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மூதாட்டிக்கு உதவிய காவலர் கிருஷ்ணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டார்.


இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அருண், “நான் பைக்கில் பல மைல் தூரங்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அப்போது, விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றியுள்ளேன். வண்டியில் அடிபட்ட விலங்குகளை காப்பாற்றி உதவி செய்துள்ளேன். ஆனால், இதுபோன்ற ஒரு நிகழ்வை நான் சந்தித்ததில்லை” என்றார்.



 


காவலர் கிருஷ்ணமூர்த்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பாரட்டியுள்ள காவல் கண்காணிப்பாளர் அர்ஜுன் சரவணன், “ராமநாதபுரம் ஏர்வாடி பகுதியில் ஒரு பாட்டியம்மா பஸ் ஏறும்போது மருந்தை மறந்துவிட்டு சென்ற நிலையில், பைக் ஓட்டுநர் அருணின் உதவியுடன் அதைக்கொண்டு அவரிடம் சேர்த்துள்ளார். தன்னுடைய பணியையே தான் செய்ததாகக் கூறி எனது பாராட்டிற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வாழ்த்துகள் கிருஷ்ணமூர்த்தி” எனப் பதிவிட்டுள்ளார்.


காவலர்களை பற்றி குறைமட்டுமே கூறுபவர்களுக்கு மத்தியில், இந்த காவலரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் தற்போது, அந்த இளைஞரையும், காவலரையும் புகழ்ந்து சமூகவலைதளங்களில் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.