இந்துக்களின் புனிதப்பயணங்களில் ஒன்று அமர்நாத் யாத்திரை. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிலிங்க தரிசனத்திற்கு செல்ல தீவிரவாதிகள் அச்சுறுத்தல், காலநிலை உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசு தீவிர கட்டுப்பாடுகளை அமர்நாத் புனித யாத்திரைக்கு விதித்திருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அமர்நாத் யாத்திரைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அமர்நாத் யாத்திரை முழுவதும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும். அமர்நாத் குகைக்கு ஜம்மு-பகல்ஹாம் மார்க்கம் வழியாகவும், ஜம்மு – பல்தால் மார்க்கம் வழியாகவும் செல்லலாம்.
அமர்நாத் பனிலிங்கம் கடல்மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் உள்ளது. இதனால், புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் மலையேறும்போது சந்திக்க நேரிடும் சிக்கல்களான பசி, குமட்டல், சோர்வு, தலைவலி, தூங்குவதில் சிரமம் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்றவற்றுக்கு தகுந்த சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புனிதப்பயணத்தின்போது தங்கும் முகாம்கள் கத்துவா, சம்பா, ஜம்மு, உதம்பூர், ரம்பான், அனந்த்நக், ஸ்ரீநகர், பால்டல் மற்றும் சந்தன்வாரி ஆகிய இடங்களில் அமைக்கப்படும். இந்த முகாம்களில் தினசரி 1.22 லட்சம் பக்தர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர். அமர்நாத் யாத்திரைக்கான பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக, புனிதப்பயணத்திற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் திட்டங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
லிட்டர் பள்ளத்தாக்கில் அமர்நாத் சன்னதி கடல் மட்டத்தில் இருந்து 3,888 அடி உயரத்தில் உள்ளது. பிற தகவல்களை shriamarnathjishrine.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டில் 6 லட்சம் பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.