தமிழகத்திலேயே சரஸ்வதி கடவுளுக்கென்று தனி கோயில் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை தெய்வமான சரஸ்வதியை வழிபட்டால் கல்வி ஞானம், கலை ஞானம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நிலையில் இன்று சரஸ்வதி பூஜையை ஒட்டி கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சரஸ்வதி அம்மனின் பாத தரிசன வழிபாடு நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.



சரஸ்வதி அம்மனின் உற்சவமூர்த்தி சிலைக்கு வெண்பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு காட்சி அளிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவரும் வெண் தாமரை மலர்களை சரஸ்வதி அம்மனுக்கு காணிக்கையாக்கி வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக முகக் கவசம் அணியாதவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



 

பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து நோட்டு, புத்தகம், பேனா போன்ற பொருட்களை சரஸ்வதி அம்மனின் பாதத்தில் வைத்து வணங்கி தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என வேண்டி செல்கின்றனர். அதேபோல கோயில் வளாகத்தில் பெற்றோருடன் அமர்ந்து மாணவ, மாணவிகள் நோட்டுப் புத்தகங்களில் பாடங்களை எழுதியும் கல்வி ஞானம் பெற வேண்டி கொள்கின்றனர். இதேபோல நாளை விஜயதசமியையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் வித்யாரம்பம் என்கிற நெல் மணிகளில் சரஸ்வதி அம்மன் கோயில் வளாகத்தில் குழந்தைகள் அமர்ந்து எழுதும் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் நாளை வெள்ளிக்கிழமை என்பதால் விஜயதசமி நாளன்று கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் வழக்கம்போல் நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.