தமிழகத்திலுள்ள நடுத்தர குடும்பம் முதல் வசதி படைத்தவர்கள் வரை, திருபுவனம் பட்டு துணிகளை வாங்கி செல்வது என்பது, ஐதீக மாகவும், ராசியாகவும் இன்றளவு கருத்தப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் காலத்திலிருந்து திருபுவனத்தில் பட்டுச் சேலை உற்பத்தி பாரம்பரியமிக்க கைத்தறியால் அழகுற வடிவமைக்கப்பட்டு வருகிறது. பட்டு சேலைகளின் தலைப்பு, ஓரங்களில் அழகான வடிவமைப்பு, ஜரிகை வேலைப்பாடுகள் அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பதால் திருபுவனம் பட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. பட்டு நுால்காரர்கள் என்றழைக்கப்படும் சௌராஷ்ட்ரா சமூகத்தை சேர்ந்த தான் பட்டு நெசவுத்தொழிலில் செய்து வந்துள்ளனர். இவர்கள் அசல் பட்டு ஜரிகையினாலும், முறுக்கு பட்டினால், பலவையான டிசைன்களில்  பட்டு துணிகளை நெய்வது சிறப்பாகும்.




உலகத்தில் பல்வேறு ஊர்களில் பட்டு துணிகளை நெசவு செய்வதில் சிறப்பு இருந்தாலும், திருபுவனம் பட்டிற்கு என்று தனிச்சிறப்பு உண்டு என்பதில் உலகறிந்த விஷயமாகும். இதே போல் காவிரி டெல்டா மட்டுமில்லாமல், தமிழகம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வாழும், தமிழர்கள் மற்றும் பல்வேறு பிரிவினர், விலை உயர்ந்த துணிகளை வாங்கினாலும், திருபுவனத்தில் தயாரிக்கப்படும் பட்டு துணிகளை வாங்கினால் தான், பெண்களுக்கு நிம்மதி ஏற்படும். திருமணம் மற்றும் விஷேச நாட்களில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும், குடும்பத்துடன் திருபுவனத்திற்கு வந்து, தெரு முழுவதுமுள்ள பட்டு துணி கடைகளை பார்வையிட்டு, தரமான அழகிய டிசைனில் நெய்யப்பட்ட சேலைகள், வேட்டி, துண்டுகள், கைச்சட்டைகள் வாங்கி கொண்டு, செல்வார்கள். இது போன்ற பழக்க வழக்கம் காலம் காலம் தொட்டு இன்றளவும் நடைபெறுவது சிறப்பாகும்.




இத்தகைய சிறப்பு பெற்ற நெசவாளர்கள் கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம் உள்ளிட்ட மூன்று தாலுக்கா மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலனோர் உள்ளனர். மாவட்டத்தில்  சுமார் 18 கூட்டுறவு பட்டு சங்கமும், 300 க்கும் மேற்பட்ட தனியார் பட்டு கடைகள், நெசவாளர்கள் என  சுமார் 1 லட்சம் பேர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள நடுத்தர குடும்பம் முதல் வசதி படைத்தவர்கள் வரை,  திருபுவனம் பட்டு துணிகளை வாங்கி செல்வது என்பது, ஐதீக மாகவும், ராசியாகவும் இன்றளவு கருத்தப்படுகிறது. இதனால் விஷேச நாட்களில் கும்பகோணம் , திருபுவனம்  மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.


ஒரு பட்டுப்புடவை நெசவு செய்ய குறைந்தது சுமார் 15 நாட்கள் வரை ஆகும். ஒரு மாதத்திற்கு 2 பட்டு சேலைகள் தயார் செய்யப்படுகிறது.  நெசவுத்தொழிலை குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்து வருவது சிறப்பாகும். இத்தகைய புகழ்வாய்ந்த புவிசார் குறீயிடு பெற்ற  திருபுவனம் பட்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை  வெளியிடப்பட்டது. அதன்படி இப்பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு பெற கடந்த 2014 ஆம் ஆண்டு பூம்புகார்  நிறுவனத்தில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தமிழக அரசின் புவிசார் குறியீடு ஒருங்கிணைப்பாளர் ப.சஞ்சய்காந்தி விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து  கடந்த 2019ஆம் ஆண்டு திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.


இதன் தொடர்ச்சியாக, இந்தியா சுதந்திரமடைந்து 75 வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இதுவரை சேலம் வெண்பட்டு சேலை, கோவை கோராபட்டு காட்டன், பவானி சமுக்காளம், மதுரை சுங்கடி சேலை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, நாகர்கோவில் நகை ஆபரணங்கள், ஈத்தாமொழி நெட்டை தென்னை, மாமல்லபுரம் கற்சிற்பம், காரைக்குடி கண்டாங்கி சேலை, பத்தமடை பாய் ஆகிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து புவிசார் குறியீடு பெற்ற திருபுவனம் பட்டுக்கு,  சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு நிகழ்ச்சி திருபுவனத்தில் நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் உறையை தமிழ்நாடு அஞ்சல வட்ட இயக்குநர் ஆறுமுகம் வெளியிட, தமிழக அரசின் தலைமை கொறடா கோவிசெழியன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.




முன்னதாக, கும்பகோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அருள்தாஸ் வரவேற்றார். திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் செல்வம் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்த வழக்கறிஞர் ப.சஞ்சாய்காந்தி கூறுகையில், தமிழகத்தில் 35 பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு கிடைத்துள்ளது. 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அஞ்சல் துறை சார்பில் பூம்புகார் நிறுவனத்தின் அனுமதியோடு புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பை மேலும் மெருகூட்டும் விதமாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார்கோவில் குத்துவிளக்குக்கும், திருபுவனம் பட்டுக்கும் அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும் என்றார்