நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தொற்று பரவுவதை குறைத்து வருகிறது. மேலும் கொரோனோ பரவுவதை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என சுகாதார அமைப்புகள் கூறுகின்றன. அதன் காரணமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பல நாடுகளுக்கு வர அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் தடுப்பு ஊசியை கட்டாயம் என்ற சூழல் நிலவுகிறது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 23107 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு, 22 ஆயிரத்து 566 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் என பல்வேறு இடங்களில் 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 312 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்று பரவ கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.




அந்த வகையில் தற்போது பல்வேறு மாவட்டங்களை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப்பிரியர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியதாவது: ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தற்போது நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மதுபான பிரியர்களாகிய நுகர்வோர்கள் மதுபானங்களை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் வாங்கும்போது, கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் பதிவு செய்யும் வகையில் அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வரப்பெற்ற குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம். இந்த செயற்கரிய செயலுக்கு வாடிக்கையாளர்களாகிய உங்களது முழு ஒத்துழைப்பை அளித்து ஆரோக்கியமான கோவிட்-19 தொற்றில்லா மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அச்செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தாத மதுபான பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் சில தினங்களுக்கு மது பானம் அருந்த கூடாது என்பதால் தடுப்பூசியை தவித்து வந்த மது பிரியர்கள் தற்போது வேறுவழியின்றி செய்வதறியாது தவித்து வருகின்றனர்.