தஞ்சாவூர்: உலக ரத்த கொடையாளர் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ரத்த தானம் செய்த 8 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கி பேசுகையில், அனைவரும் ரத்ததானம் செய்வோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


உலக ரத்த கொடையாளர் தினம்


ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான கருப்பொருள் "ரத்த நன்கொடையின் 20ம் ஆண்டு கொண்டாட்டம், ரத்த கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்! என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டு ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த கொடையாளர்களை கௌரவித்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.


ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


இதில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து தொடர்ந்து ரத்த தானம் அளித்து வரும் ரத்தக் கொடையாளர்கள் டாக்டர் கணேஷ்குமார், ராஜா, விக்னேஷ், தனுஷ் குமார், நவீன், ஜெயப்பிரகாஷ், எஸ்.விக்னேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டி பேசியதாவது: ரத்த தானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் பலரும் ரத்தம் இல்லாமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு வசதிகள் உள்ள தமிழகத்தில் இது போன்ற விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை தடுப்பதற்கு ரத்த தானம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


ரத்ததானத்தால் பல உயிர்களை காப்பாற்றலாம்


ரத்ததானம் செய்தால் பல உயிர்களை காப்பாற்றலாம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிக அளவில் உள்ளது. எனவே அனைவரும் ரத்ததானம் செய்வோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் என்றார்.




இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், தாய் மாநில திட்ட மேலாளர் டாக்டர் மருது துரை, மருத்துவ மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி, குடும்ப நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் அன்பழகன், மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம், மருத்துவக் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி,  நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், அமுதா வடிவு, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முத்து மகேஷ், முகமது இத்ரியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


ரத்த தானம் செய்வோம் என்று உறுதி மொழி ஏற்பு


தொடர்ந்து ரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தன்னார்வமாக ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள். நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.


ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி ரத்த தானம் செய்வேன். எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை உட்பட 4 அரசு இரத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டில் இம்மாவட்டத்தில் 198 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 25366 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 


நிகழ்ச்சிகளை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி டாக்டர் வேல்முருகன் ஒருங்கிணைத்தார்.