இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், நுகர்வோர்களுக்கு, விரோதமாக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ளவதாக பிரதமர் மோடி முடிவு எடுத்து அறிவித்ததற்கு கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு திட்டமிட்டு பெருநிறுவனங்களின் கைப்பாவையாகவும், பெரு நிறுவனங்களுக்கு முழு ஆதரவாக இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலனுக்கு விரோதமாக கொண்டு வந்த மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை, இந்தியாவில் உள்ள விவசாயிகள், வேண்டாமென, கடும் குளிர். சுட்டுப் பொசுக்கும் வெயில், தொடர் மழையால் போராட்டம் கூடாரங்களில் மழைநீர் புகுந்து உறக்கங்களை துறந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் 700க்கும் அதிகமான விவசாயிகளின் உயிர்களை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் வேளாண் விரோத மூன்று கருப்புச் சட்டங்களை முற்றிலுமாக விலக்கிக் கொண்டுள்ளது. போராடும் உறவுகளின் மீது பிரதமர் மோடி, நற்சிந்தனை, நல்லெண்ணம் ஏற்பட்டு அவரையும் அவர் சார்ந்த வழிநல்வழிப்படுத்தி அருள வேண்டும் என வழிபாடு நடத்தி கடந்த 2020 செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் உள்ள விநாயகர் கோவிலில், விவசாயிகள் தேங்காய்களை உடைத்து வேண்டுதல் வழிபாடு செய்தனர். அதே நாளில் இந்திய குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆகியோருக்கு இது குறித்து கடிதம் அனுப்பட்டது.
கடந்த 26.1.2021 அன்று குடியரசு தினத்தன்று, டெல்லியை நோக்கி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகளான சுவாமிமலை சுந்தரவிமலநாதன், அய்யாரப்பன், இளங்கோ, இளவரசன் ஆகியோர் கும்பகோணம் ரயில் நிலையத்திலுள்ள விநாயகர் கோயிலில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால், சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்வேன் என்று வேண்டி, உறுதிமொழி எடுத்து கொண்டு, போராட்டத்திற்கு டெல்லிக்கு சென்றனர்.
இந்நிலையில், இந்திய விவசாயிகள், இந்தியர்கள் மீது உண்மையான நல்லுணர்வு, நல்லெண்ணம், நற்சிந்தனை ஏற்பட்டு போராடிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரும், ஐக்கிய உழவர் முன்னணியினரும், அனைத்து விவசாயிகளும், தன்னுயிரை அர்ப்பணித்த 600க்கும் அதிகமான விவசாயிகளின் தியாகங்கள் உண்மையிலேயே உணர்வுப்பூர்வமானது, போராடியவர்கள் எல்லாம் உண்மையான விவசாயிகள் தான் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி கடந்த 19.11.2021, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப்படும் என அறிவித்துள்ளார்.
அவருக்கு விவசாயிகள், மீது நல்லெண்ணம் ஏற்படுத்திய, கும்பகோணம் ரயில் நிலையத்திலுள்ள விநாயகர் கோயில் உள்ள கணபதி பிள்ளையாருக்கு, வேண்டுதலை நிறைவேற்றியதற்காக, நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு குழந்தை வட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார் கலியமூர்த்தி சாமிநாதன் முன்னிலை வகித்தனர் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து புதிய மின் திருத்த சட்டத்தையும், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு தேசிய கொடி ஏந்தி கோஷமிட்டனர்.