உடல் ஆரோக்கியம், உடல் வலிமை, மன அழுத்தத்தை போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாகவும், இளைஞர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் மற்றும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆண்களுக்கான தேசிய அளவிலான மாபெரும் மராத்தான் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், ஊட்டி ராணுவ வீரருமான மோகித் ரத்தோர் நிர்ணயிக்கப்பட்ட 20 கி.மீ தூரத்தை முதலாவதாகக் கடந்து முதல் பரிசை வென்றார். தமிழக தடகள சங்கம் ஒப்புதலுடன் தஞ்சாவூர் தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் முதல்  இளைஞவர்கள் வரை சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.


தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் தொடங்கிய இம்மராத்தான் ஒட்டப்போட்டியை பிரபல குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சாத்தப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்கத்தின் துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ரவிக்குமார், தஞ்சாவூர் தணுவர்ஷன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் உலகநாதன், தஞ்சாவூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கபிலன், தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கச் செயலாளரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் தொழில்நுட்ப வல்லுனருமான செந்தில்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




போட்டியாளர்கள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தொடங்கி மருத்துவக் கல்லூரி, பிள்ளையார்பட்டி, வல்லம் வரை சென்று மீண்டும் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நிர்ணயிக்கப்பட்ட 20 கி.மீ. தூரத்தைக் கடந்து நிறைவு செய்தனர். தஞ்சாவூர் தடகள சங்க உறுப்பினர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என மொத்தம் 30 பேர் நடுவர்களாக செயல்பட்டனர். இப்போட்டியில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஊட்டி ராணுவ வீரருமான மோகித் ரத்தோர் முதல் பரிசு பெற்றார்.  அவருக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.


இரண்டாவது பரிசு ரூ.50,000 மற்றும் கேடயம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார், மூன்றாவது பரிசாக ரூ.25,000 மற்றும் கேடயம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், நான்காவது பரசான ரூ.15,000 மற்றும் கேடயம் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அசோக் தந்தசேனா, ஐந்தாவது பரிசான ரூ.10,000 மற்றும் கேடயம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்க வழங்கப்பட்டது. மேலும் 20 நபர்களுக்கு தலா ரூ.1,000 ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.


விவசாயிகளின் பாதுகாவலனாக முதல்வர் செயல்படுகிறார் - அமைச்சர் வீ.மெய்யநாதன் பேச்சு