அக்ரி எஸ்போ 2021 என்ற தலைப்பிலான விவசாய கண்காட்சி கும்பகோணத்தில் தொடங்கியது. இக்கண்காட்சியில் ஏராளமான நவீன விவசாய கருவிகள், விவசாய உபகரணங்கள், சாதனங்கள், பாரம்பரிய விதை ரகங்கள், இயற்கை விவசாயத்தை வரவேற்கும் அரங்குகள், இருந்த இடத்தில் இருந்தே தங்களது பிரச்சனைகளுக்கு விவசாயிகள் தீர்வு காணவும், சந்தைபடுத்தலை எளிமையாக்கவும், மேம்படுத்திடவும், நோய்கள் குறித்தும், அதனை போக்கும் வழிமுறைகள் குறித்த ஆலோசனை வழங்கிட நவீன தொழிற்நுட்ப வசதிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.




இந்நிலையில், கண்காட்சியில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த பாரம்பரிய நெல் ரகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாவலர் நெல் ஜெயராமன் ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அவருடன் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் தமிழழகன்  ஆகியோர் உடனிருந்தனர்.


இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், இந்தியாவிலேயே, முதன்முறையாக, வேளாண்துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளின் பாதுகாவலனாக தமிழக முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் பாதுகாவலர் நெல் ஜெயராமன் ஆகியோரை போற்றும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க பாரம்பரிய நெல் ஜெயராமன் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 200 ஏக்கர்  நிலப்பரப்பில் 25 லட்சம் மதிப்பீட்டீல் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது.




மேலும் 22.47 சதவீதமாக உள்ள தமிழக வனப்பரப்பை, வருகிற பத்து ஆண்டுகளில், ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் 33 சதவீதமாக உயர்த்த  தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொலை நோக்கு திட்டமான பசுமை தமிழகம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேட்லிலைட் உதவியோடு, வனப்பரப்பு குறைவாக உள்ள இடங்களில் அதனை மேம்படுத்தும் வகையில் குறுங்காடுகள், அடர் வனங்கள் உருவாக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவையான பல நல்ல திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார்.


தஞ்சாவூர் பற்றி அறிய மரபு நடை பயணம் - சுற்றுலா பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு